பதிவு செய்த நாள்
27
அக்
2011
10:10
தூத்துக்குடி : திருச்செந்தூர் முருகன் கோயில் கந்தசஷ்டி திருவிழா நேற்று யாகசாலை பூஜையுடன் துவங்கியது. ஏராளமான பக்தர்கள் ஆறு நாள் சஷ்டி விரதத்தை துவக்கினர். இதையொட்டி கோயில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டது. சிறப்பு பூஜைகளுக்குப்பின், காலை 7 மணியளவில், சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானை அம்பாள்களுடன் யாகசாலை மண்டபத்தில் எழுந்தருளினார். சுவாமி அம்பாள்களின் பிரதான கும்பங்கள், வேத கும்பங்கள், 27 பரிவாரமூர்த்தி கும்பங்கள் வைக்கப்பட்டு, யாகசாலை பூஜை, செந்தில் தந்திரி குமார் பட்டர் தலைமையில் நடந்தது. அங்கு, பூர்ணாகுதிக்குப்பின், யாகசாலை தீபாராதனை நடந்தது. அதன்பின், சுவாமி ஜெயந்திநாதர் வீரவாள்வகுப்பு, வேல்வகுப்பு பாடல்களுடன் தங்கச்சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். வெளிநாட்டு பக்தர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கோயிலுக்குள்ளும், கோயில் வளாகத்திலும் தங்கி தங்கள் ஆறு நாள் சஷ்டி விரதத்தை துவக்கினர். அங்கப்பிரதட்சணம், அடிப்பிரதட்சணம் செய்து நேர்த்திக்கடனை செலுத்தினர். விழா நாட்களில் தினமும் காலை,மாலை யாகசாலை பூஜை, தீபாராதனை, சுவாமி வீதியுலா நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான சுவாமி ஜெயந்திநாதர், ஆணவம் கொண்டு போரிடும் சூரனை வதம் செய்யும், சூரசம்ஹாரம் அக்.,31ம் தேதி மாலை கோயில் கடற்கரையில் நடக்கிறது.