பதிவு செய்த நாள்
11
மார்
2017
10:03
நாகப்பட்டினம்: நாகை அடுத்த, நாகூர் ஷாகுல் ஹமீத் பாதுஷா நாயகம் தர்காவில், 460வது ஆண்டு கந்துாரி விழா, பிப்., 28ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான, தர்கா சன்னிதானத்தில் சந்தனம் பூசும் வைபவத்தை முன்னிட்டு, சந்தனக்கூடு ஊர்வலம், நேற்று முன் தினம் இரவு நடந்தது. நாகை அபிராமி அம்மன் திருவாசலில் இருந்து ஊர்வலம் துவங்கியது. வாத்தியங்கள் முழங்க, நேற்று அதிகாலை, 4:30 மணியளவில், நாகூர் தர்கா அலங்கார வாசலை வந்தடைந்தது. பின், சந்தனக்கூடு ரதத்தில் இருந்து, சந்தனம் நிரப்பப்பட்ட குடங்கள், தர்காவிற்குள் கொண்டு செல்லப்பட்டன. தர்கா பரம்பரை கலிபா மஸ்தான் சாகிப், துவா ஓதிய பின், சந்தனம் பூசும் வைபவம் நடந்தது.இசை அமைப்பாளர், ஏ.ஆர்.ரஹ்மான் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.