அக்காலத்தில் மூன்றாம் குலோத்துங்க சோழன் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது ஆந்திராவின் சித்தூர் பகுதி. இன்று இப்பகுதிக்கு உட்பட்ட வேப்பஞ்சேரியில் எழுந்தருளியுள்ளார், லட்சுமிநாராயணர். பல ஆண்டுகளுக்கு முன் வைணவ பக்தர் ஒருவரின் கனவில் தோன்றி, புற்றுக்குள் தாம் இருப்பதாக லட்சுமி நாராயணர் சொன்னார். மன்னனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது உத்தரவின்படி அந்தப் புற்றை தேடிக்கண்டுபிடித்தனர். அப்போது அசரீரியாக, பக்தர்களின் பாவங்களைப் போக்க தாம் எழுந்தருளி உள்ளதாக குரல் வந்தன. அத்துடன் இந்தத் தலத்தை வேம்பஞ்ச ஹரி என்று அழைக்கவும் உத்தரவானது. வேம் என்றால் பாவம்; பஞ்சம் என்றால் ஐந்து; ஹரி என்றால் நாராயணன். வேம்பஞ்ச ஹரி என்பதுதான் இப்போது வேப்பஞ்சேரி என அழைக்கப்படுகிறது. பின்னர், மூன்றாம் குலோத்துங்க சோழனால் லட்சுமி நாராயணருக்கு முறைப்படி கோயில் கட்டப்பட்டது. மூலவருக்கு அணிவிக்கப்பட்ட மாலை சாளகிராமங்களால் ஆனது. இது நேபாள நைமிசாரண்யத்தில் இருந்து கொண்டு வரப்பட்டது. இடது மடியில் லட்சுமியை அமரவைத்து அணைத்தவாறு புன்னகைபுரிய சேவை சாதிக்கும் லட்சுமி நாராயணர், பக்தர்களின் சகல பாவங்களையும் போக்கியருள்கிறார். ஆந்திர மாநிலம், சித்தூரில் இருந்து 20 கி.மீ. தூரத்தில் வேப்பஞ்சேரி உள்ளது. சித்தூரிலிருந்து பேருந்து வசதி உள்ளது.