பதிவு செய்த நாள்
16
மார்
2017
06:03
ஆந்திராவிலுள்ள பிரசித்தி பெற்ற நதிகளில் கோதாவரியும் ஒன்று. சிம்ம ராசியில் பிரஹஸ்பதி வரும்பொழுது. கோதாவரி நதிக்கு உற்சவம் வரும். அந்த நதி மஹாராஷ்டிர மாநிலத்தில் நாசிக்கருகில் மேற்கு தொடர்ச்சி மலையில் த்ரிம்பாக் என்ற இடத்தில் பிறக்கிறது. இந்த நதி 1450 கி.மீ. தூரம் பயணம் செய்து வங்கக் கடலில் கலக்கிறது.
கவுதம மஹரிஷி ஆசிரமத்தில், வறட்சி காலத்திலும் நீர் நிலைகளில் நீர் நிறைந்திருப்பதும், பயிர்கள் பச்சையாக இருப்பதும் கண்டு பல முனிவர்கள் அவரிடத்தில் தஞ்சம் புகுந்தனர். அவர்களையும் அன்புடன் வரவேற்று. அவர்களுக்கும் ஆதரவு அளித்தார். எல்லோரும் கவுதம மஹரிஷியை போற்றி பாராட்டினர். சிறிது காலம் கழிந்தவுடன். அந்த முனிவர்களுக்கு கவுதம மஹரிஷியின் மேல் பொறாமை ஏற்பட்டது. அவர்கள் உண்ட வீட்டிற்கே தீங்கு செய்வதுபோல் அவரை அந்த ஆசிரமத்திலிருந்து வெளியேற்ற திட்டம் தீட்டினர். மாயபசுவினை தயார் செய்து அவருடைய நிலத்திலுள்ள பயிர்களையெல்லாம் மேய விட்டனர். அந்த மாயப்பசு பயிரெல்லாம் மேய்ந்து விட்டது. அந்த விஷயத்தை முனிவர்கள் அந்த மஹரிஷியிடம் தெரிவிக்க, அவர் அந்த பசுவினை விரட்ட மனதில்லாமல், சிறிய தர்பை புல்லினால் தொட்டார். அந்த தர்பை புல் அந்த மாயபசுவின் மீது பட்டவுடன் அந்த பசு மடிந்து விழுந்தது. கோமாதாவான பசு மடிந்தது கண்ட அந்த முனிவர்கள் தங்கள் திட்டம் வெற்றியடைந்தது என ஆனந்தம் கொண்டு, அந்த மஹரிஷியினை பலவாறு தூற்றி, பசுவினை கொல்வது மஹாபாபம் என்று கூறி, அதற்கு பரிகாரம் செய்ய வேண்டும் என்றனர்.
அந்த பாவத்திற்கு சிவபெருமானின் தலையில் இருந்த கங்கை நீரினை கொண்டு வந்து அந்த மடிந்த பசுவின் மேல் தெளிக்க வேண்டும் என்று அறிந்த மஹரிஷி சிவபெருமானை நோக்கி தவம் இயற்றி, அவரிடம் நடந்ததைக் கூற. சிவபெருமானும் கவுதம மஹரிஷிக்கு கங்கை நீரை கொடுக்க. அதை கொண்டு வந்து அந்த பசுவின் மீது தெளிக்க. அந்த பசு உயிருடன் எழுந்தது. அதைக் கண்ட பிற முனிவர்கள் தாங்கள் செய்த பாவச்செயலைக் கூறி மன்னிப்பு கோரினர். அந்த புனித கங்கை தீர்த்தமே - கோசாபம் நீக்கிய அந்த தீர்த்தமே - கோதாவரியாக-கவுதமி நதியாக- பாய்ந்து பரவியது என்கிறது பிரம்மாண்ட புராணம்.
அந்த நதி நாசிக் (த்ரியம்பாக் பஞ்சவட்டி) அதிலாபாத். நிஜாமாபாத். கரிம்நகர் ஜில்லா வழியாக பத்ராசலம் அடைந்து, பாபிமலை வழியாக இராஜமுந்திரி அருகே கவுதமி கோதாவரி. வசிஷ்ட கோதாவரி என இரண்டு கிளையாக பிரிகிறது. கோதாவரி நதி அருகில் நாசிக் - த்ரியம்பகம். பாசர ஞான சரஸ்வதி (அதிலாபாத்), தர்மபுரி நரசிம்ஹஸ்வாமி, மந்தனி கவுதமேஸ்வர ஸ்வாமி. காளேஸ்வரம், முக்தேஸ்வரம் போன்ற கோயில்கள் கரீம்நகர் ஜில்லாவிலும், பத்ராசலத்தில் ஸ்ரீராமரும், லஷ்மி நரசிம்ம ஸ்வாமி, மார்கண்டேய க்ஷேத்திரம்,கோட்டி லிங்கேஸ்வர கோயில், வேணுகோபால ஸ்வாமி கோயில் லக்ஷ்மி ஜனார்த்தன ஸ்வாமி கோயில். அகஸ்தேஸ்வர ஸ்வாமி, பட்டசம் பட்டிஸால க்ஷேத்திரம் கோட்டிப்பள்ளி சவும்யேஸ்வர ஸ்வாமி கோயில். மந்தபள்ளி மந்தேஸ்வரஸ்வாமி கோயில் முக்தேஸ்வரம் க்ஷணமுக்தேஸ்வர ஸ்வாமி கோயில். அந்தர்வேதி லக்ஷ்மி நரசிம்ஹ ஸ்வாமி போன்றவை ராஜமுந்த்ரி அருகில் அமைந்த முக்கியமான கோயில்களாகும்.
கம்பன் வீட்டு கட்டுத் தறியும் கவி பாடும் என புகழப்படும் கம்பர் தன்னுடைய கம்பராமாயணத்திலும் ராம, லக்ஷ்மண சீதா தேவி, இலங்கைக்குச் செல்லும் பொழுது பஞ்சவட்டி என்னும் க்ஷேத்திரத்தில் தங்கியிருந்த போது கோதாவரியையும், அதன் நதி தீரத்தின் அழகையும் விவரிக்கின்றார். இரு கரையையும் தொட்டு பரந்த நீர் நிறைந்த கோதாவரி நதியில் குவளை மலர்கள் மலர்ந்திருப்பதையும். அந்த நதி தீரத்திலுள்ள மரத்தில் பறவைகளையும், அதை கண்ணுற்ற சீதாராமரின் நிலையையும் வர்ணித்ததும் குறிப்பிடத்தக்கது.