மகாபாரதம், வனபர்வத்தில் மார்க்கண்டேயர் வர்ணிக்கும் ஒரு காட்சி. சாவித்திரி திரும்பிப் போ, உன் கணவன் சத்தியவானின் விதி முடிந்துவிட்டது. அவன் இறந்துவிடுவான் என்று நாரதரிஷி மூலம் தெரிந்தும் நீ அவனைத் திருமணம் செய்து கொண்டாய். அவனை என் கையிலிருந்து மீட்க உன்னால் முடியாது. உன் இந்தப் பரிதாப நிலைக்கு நான் காரணமல்ல. திரும்பிப் போ என்றார் எமதர்மராஜன். கையில் தன் கணவனின் உயிரைப் பிடித்தபடி சென்ற எமதர்மனைப் பின்தொடர்ந்த சாவித்திரி, உடலை விட்டுப் பிரிந்த உயிரோ, அந்த உயிரைவாங்கும் நீரோ யார் கண்களுக்கும் புலப்படாதவர் என்ற நியதி இருக்கும்போது எனக்கு மட்டும் எப்படித் தெரிகிறீர்கள்? அதனால்தான் உம்மைப் பின் தொடர்கின்றேன். உயிரை வாங்குவது உமது தர்மமானால் என் கண்களுக்கு என் கணவர் தெரியும்வரை கணவனின் பின்னால் செல்வது என் தர்மம்.
தர்மத்தை அனுசரிப்பதனால் மட்டுமே எல்லா நன்மைகளும் உண்டாகும் என்று நமது சாஸ்திரங்கள் சொல்கின்றன. நான் என் தர்மத்தைச் செய்வதை உம்மைப் போன்ற சான்றோர்கள் தடுக்க முடியாது என்றாள். இதைக் கேட்ட எமதர்மராஜர், தர்மத்தின் பெருமையை உணர்ந்த உன்னைக் கண்டு மகிழ்கின்றேன். உன் கணவனின் உயிரைத் தவிர வேறு ஏதாவது வரம் கேள் என்றார். இழந்த பார்வையை என் மாமனார் திரும்பப் பெற வேண்டும். அப்படியே ஆகட்டும். இப்போதாவது திரும்பிப் போ. தர்மத்தைப் பின்பற்றுகின்ற சான்றோர்களின் நட்பு ஒரு நிமிடத்திற்கு உண்டானாலும் அது மிகுந்த மேன்மையளிக்கும் என்று நமது சாஸ்திரங்கள் சொல்கின்றன. எனவே தான் உங்களைப் பின் தொடர்கிறேன். சத்சங்கத்தின் பெருமையைக் கூறிய உனக்கு மற்றொரு வரம் தருகிறேன். உன் கணவனின் உயிரைத் தவிர வேறு ஏதாவது கேள். ராஜ்யத்தை இழந்து காட்டில் வசிக்கும் என்னுடைய மாமனாருக்கு மீண்டும் ராஜ்யம் கிடைக்க வேண்டும். உன் விருப்பப்படியே வரம் தந்தேன். இப்போதாவது திரும்பிப் போ. மனதினால்கூட யாருக்கும் துரோகம் நினையாமல், விருப்பு வெறுப்பு இல்லாமல் சமதிருஷ்டியுடன் வாழும் சான்றோர்களில் உயர்ந்தவர் நீர் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.
இவ்வுலகில் பிறந்தவர் எல்லாம் இறந்தே ஆக வேண்டும் என்ற கால தத்துவத்தின் பிரதிபிம்பம் நீர். உம்மைத் தரிசிக்கும் பேறு இன்று எனக்குக் கிடைத்தது. எந்த காலத்திலும் தர்மத்தை மீறாத உம்மைப் போன்ற சாதுக்களின் சரணத்தை அடைந்த சக்தியற்ற என்னிடம் கருணை காட்ட வேண்டும் என்றாள். என்ன ஆச்சரியம் நான் ஒரு சான்றோன் என்று இதுவரை ஒருவர்கூட புரிந்து கொள்ளாமல், துன்பம் வந்தபோதெல்லாம் வாய்க்கு வந்தபடி திட்டிக் தீர்க்கும் அறியாமை நிறைந்த மனித சமுதாயத்தில் இந்த சாவித்திரி ஒரு விதிவிலக்கு என்று எமனுக்கு ஆச்சரியம் உண்டானது. மகளே, நீ கால தத்துவத்தின் பெருமையை உணர்ந்தவள். மூன்றாம் வரம் தருகிறேன். உன் கணவனின் உயிரைத் தவிர வேறு ஏதாவது வரம் கேள் என்றார் எமன். என் தந்தைக்கு நூறு குழந்தைகள் பிறந்து என் தந்தையின் குலம் தழைக்க வேண்டும். உன் விருப்பப்படியே வரம் தந்தேன். இப்போதாவது திரும்பிப் போ. எல்லா உயிர்களுக்கும் நண்பர்களாக இருப்பதானலேயே சான்றோர்களிடம் அன்பு ஏற்படுகிறது. எனவேதான் தன்னம்பிக்கை இழந்த மனிதன்கூட சான்றோர்களின் வாக்கில் நம்பிக்கை வைத்து உயர்நிலை அடைகின்றான் என்று சாஸ்திரம் சொல்கிறது என்றாள் சாவித்திரி. சான்றோர்களிடம் ஆழ்ந்த நம்பிக்கை வைத்துள்ள உன்னைக் கண்டு எனக்கு மிக்க மகிழ்ச்சி. மீண்டும் ஒரு வரம் தருகிறேன், கேள். உன் கணவனின் உயிரைத் தவிர.... என்று இந்த முறை சொல்ல மறந்துவிட்டார் எமன்.
சத்தியவான் மூலம் நூறு குழந்தைகளுக்கு நான் தாயாக வேண்டும் என்றாள் சாவித்திரி. சான்றோர்களின் பெருமையைக் கேட்ட ஆனந்தத்தில் மறதியே இல்லாத எனக்குக்கூட மறதி வந்து விட்டதே என்று வியந்த எமன் சிறிது தியானித்தார். சாவித்திரியின் இறைநம்பிக்கை, தர்மத்திடம் நம்பிக்கை, சான்றோர்களிடம் அவள் கொண்ட அசையா நம்பிக்கை ஆகியவை சத்தியவானின் தலையெழுத்தை மாற்றிவிட்டதை உணர்ந்தார். எனவே நான்காவது வரத்தையும் தந்தார். எமன் கையில் சென்ற சத்தியவான் மீண்டும் உயிர் பெற்றான்.