பதிவு செய்த நாள்
23
மார்
2017
05:03
சாஸ்திரங்களில் மனைவியை எந்த நேரத்தில், எந்தப் பக்கம் வைத்துக்கொள்ள வேண்டும் என்று விதிக்கப்பட்டுள்ளது. பூஜை செய்யும்போது, நமஸ்காரம் செய்யும்போது, மனையில் அமர்ந்து சங்கல்பம் செய்யும்போது வலது பக்கம் இருக்க வேண்டும். ஊஞ்சலில் அமரும்போதோ, சாப்பிடும்போதோ, படுத்துக்கொள்ளும்போதோ, விசேஷமாக ஸ்நானம் செய்யும்போதோ, அதாவது சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் முதலிய சமயங்களிலோ கலச தீர்த்தத்தை அபிஷேகிப்பார்கள். பெரும்பாலான உபாத்யாயர்கள் செய்வது, அந்த நேரத்தில் வலது பக்கம் அமர வேண்டும் என்று சொல்லிச் செய்வார்கள். ஆனால், சாஸ்திரம் அப்படி அல்ல. இடதுபுறம்தான் மனைவி அமரவேண்டும். நமக்கு சுலபமாகப் புரியும்படி சொல்வதானால், கல்யாணராமர், பட்டாபிரமர் கோலங்களை நினைவுபடுத்திக் கொள்ளலாம்.
கல்யாணராமரைப் பார்த்தால், சீதை வலது புறம் இருப்பார். பட்டாபிராமரைப் பார்த்தால், சீதை இடது புறம் இருப்பார். ஏனென்றால், பட்டாபிஷேகம் என்பது அபிஷேகமில்லையா! அபிஷேக நேரத்தில் இடது புறத்தில் இருக்கவேண்டும். சீதை எந்தப் புறத்தில் இருக்கிறார் என்பதை வைத்துத்தான். கல்யாணராமரா, பட்டாபிராமரா என்று சொல்கிறோம். அதனால், சாஸ்திரங்களில் மனைவி இந்த நேரத்தில், இந்த இடத்தில் இருக்கவேண்டும் என்று சொல்லப்பட்டதை நாம் பின்பற்ற வேண்டும்.