பதிவு செய்த நாள்
03
நவ
2011
10:11
தூத்துக்குடி : திருச்செந்தூர் முருகன் கோவில் கந்த சஷ்டியின் நிறைவு நிகழ்ச்சியான, சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம் நடந்தது. இங்கு, கந்த சஷ்டி திருவிழா, அக்., 26ல் யாகசாலை பூஜையுடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், அக்., 31 மாலை நடந்தது. நேற்று முன்தினம் மாலை சுவாமி குமரவிடங்கப் பெருமான் - தெய்வானை அம்பாள் திருக்கல்யாணத்திற்கு முந்தைய, தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதன்பின், நள்ளிரவு 12 மணியளவில், வேதமந்திரங்கள் முழங்க, சுவாமி - அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்து, மொய் எழுதி, திருமாங்கல்ய பிரசாதம் பெற்றுச் சென்றனர்.
புதிய இணை ஆணையர் பொறுப்பேற்பு: திருச்செந்தூர் கோவில் இணை ஆணையராக இருந்த பாஸ்கரன், பழநி கோவிலுக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து, மதுரை மண்டல இணை ஆணையராக இருந்த சுதர்சன், இக்கோவில் இணை ஆணையராக நியமிக்கப்பட்டார். நேற்று, சுதர்சன் பொறுப்பேற்றுக் கொண்டார்.