பதிவு செய்த நாள்
10
ஏப்
2017
02:04
ராமநாதபுரம்: குருத்தோலை ஞாயிறு தினத்தை முன்னிட்டு ராமநாதபுரத்தில் கிறிஸ்தவர்கள் ஊர்வலம் சென்றனர். இறைப்பணி துவங்கும் முன் ஏசு மேற்கொண்ட 40 நாள் விரதத்தை கிறிஸ்தவர்கள், 40 நாள் தவக்காலமாக கடைபிடித்து வருகின்றனர். இக்கால கட்டத்தில் சர்ச்களில் மாலை வேளை ஆராதனை, மறை சிந்தனை உரை வழங்கப்பட்டது. ஏசு உயிர்த்தெழும் நாளான ஈஸ்டர் பண்டிகைக்கு முதல் ஞாயிறு குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்படுகிறது. ராமநாதபுரத்தில் நேற்று கிறிஸ்தவர்கள் ஏராளமானோர் கைகளில் குருத்தோலை ஏந்தி வீதிகளில் ஊர்வலம் வந்தனர்.
புனித ஜெபமாலை அன்னை சர்ச்சில் பாதிரியார் ராஜமாணிக்கம் தலைமையில், நடந்த சிறப்பு திருப்பலியில் பங்கேற்றனர். தவக்காலத்தின் கடைசி வெள்ளி ‘புனித வெள்ளி’யாக கடைபிடிக்கப்படுகிறது. மூன்று நாள் கழித்து உயிருடன் ஏசு எழுந்த காட்சி ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாப்படுகிறது. இந்தாண்டு பெரிய வியாழன்( ஏப்., 13), புனித வெள்ளி(ஏப்., 14), ஈஸ்டர்( ஏப்., 16) கடைபிடிக்கப்படுகிறது. ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம், மண்டபம் முகாம், உச்சிப்புளி, முத்துப்பேட்டை, பரமக்குடி, ஓரியூர், ஆர்.எஸ்.மங்கலம் உள்பட பல்வேறு இடங்களில் குருத்தோலை ஞாயிறு தினம் கடைபிடிக்கப்பட்டது.