பதிவு செய்த நாள்
10
ஏப்
2017
02:04
கோவை : வெள்ளியங்கிரி மலை அடிவாரம் பூண்டியிலுள்ள, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில் நேற்று பங்குனி உத்திர தேர்த்திருவிழா கோலாகலமாக நடந்தது. வெள்ளிமலை என்றழைக்கப்படும், வெள்ளியங்கிரி மலை அடிவாரம் பூண்டி. இயற்கை எழில் சூழ்ந்த இப்பகுதியில், வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், கடந்த நான்கு ஆண்டுகளாக, பங்குனி உத்திரத்தேர்த்திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. ஐந்தாவது ஆண்டு தேர்த்திருவிழா ஏப்., 4 ம் தேதி கொடியேற்று நிகழ்ச்சியோடு துவங்கியது. விழா துவங்கியது முதல், அன்றாடம் சுவாமிக்கு, அபிஷேகம், அலங்காரம், திருவீதி உலா ஆகியவை நடந்தன. நேற்று முன்தினம் இரவு, உற்சவ மூர்த்தியான, வெள்ளியங்கிரி ஆண்டவருக்கும், மனோன்மணி அம்பாளுக்கும் திருக்கல்யாண உற்வசம் நடந்தது. இதில் பாரம்பரிய முறைப்படி, பெண் பார்த்தல், நிச்சயம் செய்தல், கல்யாண சீர்வரிசை, மாப்பிள்ளை அழைத்தல், தேங்காய் உருட்டுதல், வெற்றித்தாம்பூலம் மாற்றுதல், மலர் மாலை மாற்றுதல்;
மொய்வைத்தல், விருந்து உபசரித்தல் உள்ளிட்ட பாரம்பரிய வைபவங்கள் கடந்து, சுவாமிக்கு மங்கள வாத்தியங்கள் முழங்க திருமங்கல்ய தாரணம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். நேற்று காலை வழக்கமான பூஜைகளை தொடர்ந்து, சுவாமிக்கு மலர்களாலும், பட்டாடைகளாலும், அணிகலன்களாலும் அலங்காரம் செய்யப்பட்டது. மாலை, 3:30 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட, 18 அடி உயர தேரில் சுவாமி எழுந்தருளுவிக்கப்பட்டார். பேரூர் ஆதினம் இளையபட்டம் மருதாசல அடிகளார், பிள்ளையார் பீடம் பொன்மணி வாசக அடிகளார் ஆகியோர், தேரை வடம்பிடித்து இழுத்து துவங்கி வைத்தனர். தேர் கோவிலை சுற்றியுள்ள நான்கு மாட வீதிகளில் வலம் வந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசித்தனர். இந்து சமய அறநிலையத் துறை இணை கமிஷனர் இளம்பரிதி, உதவி கமிஷனர் ஆனந்த், வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் செயல் அலுவலர் கைலாஷ், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தேர்த்திருவிழாவை ஒட்டி, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. சிறப்பு அன்னதானமும் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள், காவடி சுமந்து, பாதை யாத்திரையாக சுவாமி தரிசனம் செய்தனர்.