பதிவு செய்த நாள்
11
நவ
2011
12:11
மதுரை: அழகர்கோவில் சுந்தரராஜபெருமாள் கோயிலின் புனிதம் கெடும் வகையில் கடைகளில் சிகரெட், பான்பராக் பொருட்களை விற்பவரின் உரிமத்தை ரத்து கோரும் மனுவை எட்டு வாரங்களுக்குள் பரிசீலிக்க நிர்வாக அதிகாரிக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.மேலூர் ஆரியப்பன்பட்டி மாணிக்கம் தாக்கல் செய்த பொது நல வழக்கு: அழகர்கோவிலில் 34 வகை பணிகளுக்கு ஜூன் 2ல் நிர்வாக அதிகாரி ஏல அறிவிப்பு வெளியிட்டார். 15 கடைகளில் பழங்கள் விற்கவும், அவற்றுக்கான வாடகை வசூலிக்கும் உரிமம், போஸ் என்பவருக்கு வழங்கப்பட்டது. அவர், தி.மு.க.,வை சேர்ந்த மலைச்சாமிக்கு உள்வாடகை விட்டார். குறிப்பிட்ட இடங்கள் மட்டுமின்றி, கோயிலின் பல பகுதிகளில் கடைகளை போஸ் நடத்துகிறார். கடைகளில் சிகரெட், பான்பராக், பேன்ஸி பொருட்களை விற்கிறார். கோயிலின் புனித தன்மை கெடுகிறது. அவரது லைசென்ஸை ரத்து செய்ய கோரி அக்., 19ல் அறநிலைய துறை கமிஷனர், நிர்வாக அதிகாரிக்கு மனு கொடுத்தேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும், என தெரிவிக்கப்பட்டது.வழக்கு நீதிபதிகள் கே.என்.பாட்ஷா, எம்.வேணுகோபால் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல்கள் பொன்கார்த்திகேயன், சிவனேசன் ஆஜராயினர். அரசு தரப்பில் சிறப்பு பிளீடர் மகேந்திரன், அறநிலைய துறை சார்பில் மனோகர் ஆஜராயினர். நீதிபதிகள், ""மனுவை எட்டு வாரங்களுக்குள் பரிசீலித்து, மனுதாரர், எதிர்தரப்பு விளக்கங்களை பெற்று, சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும், என நிர்வாக அதிகாரிக்கு உத்தரவிட்டனர்.