பதிவு செய்த நாள்
17
மே
2017
06:05
பழநி: பழநி கோயிலில் மழை வேண்டி நடந்த கலச பூஜையில், வனத்துறை அமைச்சர் சீனிவாசன் நாற்காலியில் அமர்ந்து ஆகம விதிமீறல் புரிந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் இந்த பூஜை அரசு சார்பில் நடத்தப்பட்டது. காலை 7 மணிக்கு கைலாசநாதர் சன்னதி முன்பு நந்திக்கு தண்ணீர் நிரப்பி, மண்டபத்தில் புனித கலசம், யாகபூஜை நடந்தது. சிவாச்சாரியர்கள் தண்ணீர் தொட்டிக்குள் அமர்ந்து வேதமந்திரங்கள் ஓதினர்.
ஆகமவிதிமீறல்: வனத்துறை அமைச்சர் சீனிவாசன், உதயகுமார் எம்.பி., திண்டுக்கல் முன்னாள் மேயர் மருதராஜ் ஆகியோர் நாற்காலியில் அமர்ந்திருந்தனர். இணை ஆணையர் ராஜமாணிக்கம் உட்பட பக்தர்கள் அனைவரும் கீழே அமர்ந்து பூஜையில் பங்கேற்றனர். யாகவேள்வி பூஜையின்போது அனைவரும் கீழே அமர்ந்து தான் பூஜையில் பங்கேற்கவேண்டும். ஆனால் அமைச்சரின் செயல்பாடு கோயில் ஆகமவிதிகளுக்கு ஏற்றது அல்ல என பக்தர்கள், கருத்துதெரிவித்தனர்.
பக்தர்கள் பாதிப்பு: பெரியநாயகியம்மன் கோயிலில் அலகு குத்தியும், காவடிஎடுத்தும், மேளதாளத்துடன் வந்த பக்தர்களை, செக்யூரிட்டிகள் உள்ளே அனுமதிக்காததால் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பின் மேளம் கொட்டாமல் உள்ளே வர அனுமதித்தனர். இதேபோல அமைச்சர் உள்ளிட்ட வி.ஐ.பி.,க்கள் அமர்ந்திருந்ததால் வெளிப்பிரகாரத்தை வலம் வரமுடியாமல் பக்தர்கள் பாதிக்கப்பட்டனர். ரோப் காரில் ஏறி மலைக்கோயிலுக்கு செல்ல அ.தி.மு.க.,வினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. விஸ்வஇந்துபரிஷத் நகரசெயலாளர் செந்தில்குமார் கூறுகையில்,“யாகபூஜை நடக்கும்போது ஆண்டவருக்கு சமமாக நாற்காலியில் அமரக்கூடாது. இது ஆகமவிதிகளுக்கு முரணானது” என்றார்.