பதிவு செய்த நாள்
05
ஜூலை
2017
11:07
பொன்னேரி: முன்னாள் முதல்வர் அறிவுறுத்தலின்பேரில், நடைபெற்று வந்த அழகராயர் கோவில் திருப்பணிகளில், மண்டபம், ஆஞ்சநேயர், கருடாழ்வார் சன்னதிகள் புதுப்பிக்கப்படாமல் இருப்பதால், கிராமவாசிகள் அதிருப்தியில் உள்ளனர். பொன்னேரி அடுத்த, கோளூர் கிராமத்தில், ஸ்ரீதேவி பூதேவி சமேத அழகராயர் பெருமாள் கோவில் உள்ளது. இந்து அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இத்திருத்தலம், 800 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். இத்திருத்தலத்தில், ஆழ்வார்கள் சன்னதி, லட்சுமி நாராயணன் சன்னதி, ஆஞ்ச நேயர் சன்னதி, கருடாழ்வார் சன்னதிகள் உள்ளன.
ரூ.27 லட்சம்: கடந்த, 2015ம் ஆண்டு, நவம்பரில் பெய்த பலத்த மழையின் போது, அழகராயர் சன்னதி கோபுரம் இடிந்து விழுந்தது. உள்ளிருந்த அழகராயர் சிலையும் சேதம் அடைந்தது. இது குறித்து நமது நாளிதழில் படங்களுடன் செய்தி வெளியானது. அதை தொடர்ந்து, அப்போதை தமிழக முதல்வர் ஜெயலலிதா, மேற்கண்ட கோவிலை சீரமைக்க உத்தரவிட்டார். அமைச்சர், அதிகாரிகள் நேரிடையாக வந்து பார்வையிட்டு, உடனடியாக கோவில் திருப்பணிகள் துவங்கப்பட்டன. கோவில் பணிகள், 27 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் நடைபெற்று வந்தன. கடந்த ஆண்டு, ஜூலை மாதம், கோவில் திருப்பணிகள் முடிந்தன. அதே சமயம், கோவிலின் முகப்பில் இருந்த கல் மண்டபம், ஆஞ்சநேயர் சன்னதி, கருடாழ்வார் சன்னதி ஆகியவை புதுப்பிக்கப்படாமல் விடப்பட்டது. அறநிலைய துறையினர் கோவில் திருப்பணிகள் முடிந்து விட்டதாக கூறி, கும்பாபிஷேகம் நடத்த கிராமவாசிகளிடம் அறிவுறுத்தினர். முகப்பு மண்டபம், ஆஞ்சநேயர், கருடாழ்வார் சன்னதிகளையும் புதுப்பித்த பின், கும்பாபிஷேகம் நடத்தும்படி வேண்டுகோள் விடுத்தனர். இது தொடர்பாக, கிராமவாசிகள் அறநிலைய துறையினரிடம் நேரில் சென்று, தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். நடவடிக்கை ஏதும் இன்றி கிடப்பதால், கிராமவாசிகள் அதிருப்தியில் உள்ளனர்.
அரைகுறை பணி: இது குறித்து, கிராமவாசிகள் கூறியதாவது: நாங்களும், மூலவர் மற்றும் உற்சவர் சிலைகள் வாங்கியது, கோவிலுக்கு மண் கொட்டுவது என, 4 லட்சம் ரூபாய் வரை செலவிட்டு உள்ளோம். கோவிலுக்கு கூடுதல் அழகு மற்றும் பிரமாண்டம் முகப்பு மண்டபம் தான். இங்கு மண்டபம் இருந்ததால், அதை அமைக்க வலியுறுத்துகிறோம். அதை அமைக்காமல் கும்பாபிஷேகம் நடத்த சொல்கின்றனர். அரை குறை பணிகளுடன் கும்பாபிஷேகம் நடத்துவது நல்லதல்ல. மற்ற சன்னதிகளையும் சீரமைத்து கோவில் திருப்பணிகள் முழுமையாக முடித்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். இது குறித்து, அறநிலைய துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், கோவில் திருப்பணிகளுக்காக திட்ட அறிக்கை மற்றும் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் பணிகள் மேற் கொள்ளப்பட்டன. மண்டபம், மற்ற சன்னதிகள் புதுப்பிப்பது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது. உரிய நிதி ஆதாரம் பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.