பதிவு செய்த நாள்
11
ஜூலை
2017
11:07
மடத்துக்குளம்: மடத்துக்குளம் பகுதியில் பல நுாற்றாண்டுகளுக்கு முன்பு, முன்னோர்கள் அமைத்து வழிபட்ட வரலாற்று நினைவுச்சின்னம் பராமரிப்பின்றி உள்ளது. தூண் அமைப்பும், சிற்பமும் மடத்துக்குளம் அருகே மெட்ராத்தி ஊராட்சிக்குட்பட்ட விளைநிலங்களுக்கு மத்தியில், நினைவுச்சின்னம் உள்ளது. அங்கு, 12 அடி உயரத்தில் உள்ள இந்த தூணில், 12 படிநிலைகளாக சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.முதலில் சிவலிங்கம் மற்றும் நிலாவும், அருகில் கிருஷ்ணர் குழல் ஊதிய நிலையிலும் உள்ளதாக சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்ததாக ஆண்களும், பெண்களும் அணிவகுத்து நிற்பதாகவும், அதற்குகீழ் உள்ளதில், குதிரைவீரன் வருவது போன்றும், படைவீரர்கள் சிலர் அவருக்கு அருகில் நிற்பது போலவும், அடுத்த இரண்டு சிற்பங்களில் வில்அம்புடன் படைவீரர்களும், பொருட்களை சுமந்த நிலையில் செல்லும் பெண்களும் உள்ளன.
அடுத்த சிற்பம், ஒருவரை பல்லக்கில் சுமந்து வருவது போலவும், இதற்கு அடுத்த இரண்டில் சில பெண்களும் ஆண்களும் பொருட்களை சுமந்து செல்வது போலவும், அவர்களுக்கு அருகில் வில்அம்புடன் ஆண்கள் காவலுக்கு நிற்பது போலவும் காணப்படுகிறது. அடுத்ததில், பல பசுமாடுகளுக்கு இடையில் ஒருவர் நிற்பது போலவும், அடுத்து, போர்க்கள காட்சி போன்றுள்ளது. இதில், வில் அம்பாலும், கத்தியாலும் பலர் போரிடுவது போலவும் சிற்பங்கள் உள்ளன. செவ்வக அளவு பரப்பில் ஒன்றன் கீழ் ஒன்றாக சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. கல் அல்ல மரம் பொதுமக்கள் கூறுகையில், ‘இரண்டு அடிஅகலம், ஒன்றரை அடிநீளத்தில் உள்ள தூணின் நான்கு புறங்களிலும், இதே போன்ற பல சிற்பங்கள் உள்ளன. இது பார்வைக்கு கல்தூண் போல தோன்றினாலும், கல்தூண் அல்ல ... முழுவதும் ஒரே மரம் என்பதும், பல நுாற்றாண்டுகளாக பழுதின்றி உள்ளதும், ஆச்சரியமானதாகும். இதை மாலைகோவில் என குறிப்பிடுகின்றனர். இதற்கு எல்லையிலுள்ள கோவில் என அர்த்தமாகும். இதில், ஜமீன்களின் வம்சாவளியின் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகளை சிற்பங்களாக செதுக்கி வைத்து, அதை நினைவு கூர்ந்து வழிபடுவார்கள். இந்த மரத்துக்கு பலதலைமுறைகளாக எண்ணெய் ஊற்றுவதால், இன்றும் இந்த மரத்தூண் எந்தவித பழுதும் இன்றி நல்ல நிலையில் உள்ளது. ராமேகவுண்டன் புதூர் ஜமீன் குடும்பத்தினர், அமாவாசை நாளன்று வழிபட்டு செல்வார்கள்’ என்றனர். காடுகளுக்கு மத்தியில் அழிந்து வரும் இந்த வரலாற்று நினைவு சின்னத்தை பராமரித்து பாதுகாக்க வேண்டும் என வரலாற்று ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.