பதிவு செய்த நாள்
12
ஜூலை
2017
11:07
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை சாக்கை வீரசேகர உமையாம்பிகை கோயில் ஆனி திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது. அப்போது விநாயகர் தேர் சரிந்து 2 பேர் காயமடைந்தனர்.
இத்திருவிழா ஜூலை 3ல் காப்புக்கட்டுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. முன்னதாக காலை 11.00 மணிக்கு வீரசேகரர் பிரியா விடை, உமையாம்பிகை தாயார், விநாயகர் ஆகியோர் தேருக்கு எழுந்தருளினர். சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. மாலை 4.40 மணியளவில் தேரோட்டம் தொடங்கியது. முதலில் வந்த விநாயகர் தேரை, அதிகமானோர் இழுத்தனர். தேர் விரைவாக சென்றதால், நிறுத்த முட்டு கொடுக்கப்பட்டது. ஆனால், முட்டு கட்டையின் மீது ஏறி வந்த தேர் சரிய தொடங்கியது. இதில், வலையந்தாவை சேர்ந்த நீலகண்டன்,37 உள்ளிட்ட 2 பேர் காயமடைந்தனர். சரிந்த தேரை பக்தர்கள் உடனே துாக்கி நிறுத்தினர். மாற்று ஏற்பாடாக விநாயகரை சப்பரத்தில் ஏற்றிய பின்னர் தேரோட்டம் ஒரு மணி நேரம் தாமதமாக தொடங்கியது. சண்டீகேஸ்வரர், முருகன், விநாயகர் சப்பரத்தில் முன்புறம் வர அதை தொடர்ந்து வீரசேகரர் பிரியாவிடை தேரும், உமையாம்பிகை தேரும் வந்தது. 6:47 மணிக்கு மணிக்கு தேர் நிலையை அடைந்தது.திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.