பதிவு செய்த நாள்
27
ஜூலை
2017
02:07
ஆட்டையாம்பட்டி: மாரியம்மன் கோவிலில் கம்பம் நடும் விழா நடந்தது. ஆட்டையாம்பட்டி, பெரிய மாரியம்மன் கோவிலில், கம்பம் நடும் விழாவுக்காக, நேற்று முன்தினம், தானகுட்டிபாளையத்தில் தேர்வு செய்யப்பட்ட பால மரத்துக்கு, பால், இளநீர், சந்தனம் ஆகிய அபிஷேகம் செய்து, பல்வேறு வண்ண மலர்களால் அலங்கரித்து, வெட்டி எடுக்கப்பட்டது. தொடர்ந்து, ஊர்வலம் எடுத்து வந்து, ஆட்டையாம்பட்டி பஸ் ஸ்டாண்ட் அருகே, மாதேஸ்வரன் கோவிலில், மரம் செதுக்கி சீர் செய்யப்பட்டது. நேற்று மாலை, பெரிய மாரியம்மன் கோவில் எதிரே, பாவடியில் இருந்து கம்பத்தை மஞ்சள் குங்குமம் பூசி, பக்தர்கள் புடைசூழ ஊர்வலம் எடுத்து வந்து, மாரியம்மன் கோவிலில் அம்மன் முன் நடப்பட்டது. ஆக., 3ல் ஆடித்திருவிழா கொடியேற்றம் நடக்க உள்ளது. ஆக., 8 இரவு சத்தாபரணம், 9ல் அக்னி கரகம், குண்டம் இறங்குதல், தேரோட்டம், 10ல் பொங்கல் வைத்தல், அலகு குத்துதல், 11 இரவு வண்டி வேடிக்கை, ஆக., 12ல் மஞ்சள் நீராட்டு வைபவத்துடன், திருவிழா நிறைவடையும். இன்று முதல், தினமும் இரவு, உற்சவர் மாரியம்மன் விதவித அலங்காரங்களில் வீதிஉலா வருவார்.