பதிவு செய்த நாள்
31
ஜூலை
2017
12:07
அவிநாசி: அவிநாசியில், சுந்தரமூர்த்தி நாயனார் கோவிலில், 84ம் ஆண்டு குருபூஜை விழா, நேற்று கோலாகலமாக நடைபெற்றது. கடந்த, 29ம் தேதி காலை, 8:00 மணிக்கு, சுந்தரமூர்த்தி நாயனார் கோவிலில் கணபதி ஹோமம், 108சங்குபூஜை, அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை நடந்தது. திருமுறை விண்ணப்பத்தை தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், செல்வ விநாயகர், பாதிரிமரத்து அம்மன், அவிநாசியப்பர், சுப்பிரமணியர், கருணாம்பிகை அம்மன் மற்றும் 63 நாயன்மார்களுக்கு அபிஷேகமும், அலங்கார பூஜையும் நடந்தது.
ஸ்ரீ சந்திரசேகர், அம்பிகையுடன், சுந்தரமூர்த்தி நாயனார் வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தேவார திருமுறை பண்ணிசையை தொடர்ந்து, சுந்தரமூர்த்தி நாயனாருக்கு, மகா அபிஷேகம், அலங்காரபூஜையும், திருமுறை விண்ணப்பமும் நடைபெற்றது. மகேஸ்வர பூஜையுடன், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில், மத்திய கயிறு வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்று வழிபட்டனர். குருபூஜை விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர், சுந்தரமூர்த்தி நாயனார் அறக்கட்டளையினர் மேற்கொண்டனர்.