பதிவு செய்த நாள்
30
ஆக
2017
06:08
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் அர்ச்சகர் இன்றி பல சன்னதிகள் மூடி கிடப்பதால், பக்தர்கள் அதிருப்தி அடைந்தனர். புனித தலமான ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்தம், 22 தீர்த்தங்களை நீராடி தரிசனம் செய்தால் பாவங்கள் நீங்கி புண்ணியம் சேரும் என்பது ஐதீகம். அதன்படி இக்கோயிலுக்கும் தினமும் 30 ஆயிரம் வட, தென் மாநில பக்தர்கள் வந்து நீராடி, தரிசனம் செய்கின்றனர்.
மூடல்: ஆனால் கோயிலில் அர்ச்சகர்கள், மணியம் (அர்ச்சகர் கண்காணிப்பாளர்), கைங்கேரியம்(சுவாமி, அம்மன் அலங்கரிப்பவர்), பாராமேன் (கோயில் காவலர்) உள்ளிட்டோர் 80 பேர் பணிபுரிய வேண்டிய நிலையில், தற்போது 30 பேர் மட்டுமே பணியில் உள்ளதால் சேதுமாதவர், பைரவர், விசாலாட்சி அம்மன்,சந்திரசேகரர் சுவாமி சன்னதியில் அர்ச்சகர் இன்றி நிரந்தரமாக மூடியே கிடக்கிறது. மேலும் பள்ளி கொண்ட பெருமாள், காசி விஸ்வநாதர், தெட்சிணா மூர்த்தி சன்னதிகள் திறந்திருந்தாலும், உயர் அதிகாரிகள் வந்து சென்றதும் நடை மூடுவதற்கு முன்பு இச்சன்னதியை அர்ச்சகர்கள் மூடி செல்கி்னறனர். இதே போல் பாராமேன்கள் பாதுகாப்பில் ஈடுபடாமல் சொந்த அலுவல்களை கவனிக்கின்றனர். இதனால் தரிசனம் செய்ய வரும் வட, தென் மாநில பக்தர்கள் பல சன்னதிகள் மூடி கிடப்பதை கண்டு அதிருப்தி அடைகின்றனர்.
இதில் பெருமாள், காசி விஸ்வநாதர் சன்னதியில் பணிபுரியும் அர்ச்சகர்கள், தீபாரதனை நடத்தாமல் உட்கார்ந்திருந்தபடி பக்தருக்கு ஜடாரி(பெருமாள் பாதம் பொருந்திய கும்பம்) தலையில் வைத்தும், விபூதி கொடுத்து ஆன்மீக மரபு மீறும் அர்ச்சகர்கள் செயலை கண்டு பக்தர்கள் முகம் சுளிக்கின்றனர். பிரசித்த பெற்ற ராமேஸ்வரம் கோயிலில் மூடி கிடக்கும் சன்னதியில் அர்ச்சகர் நியமித்து, ஆன்மீக மரபு மீறும் அர்ச்சகர்கள், கோயில் ஊழியர்கள் மீது இந்து அறநிலைதுறை ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து அமைப்பினர் தெரிவித்தனர். இதுகுறி்த்து ராமேஸ்வரம் கோயில் இணை ஆணையர் மங்கையர்கரசி கூறுகையில்: அர்ச்சகர், மணியம் உள்ளிட்ட 32 பணியிடங்களை நிரப்ப இந்து அறநிலை ஆணையருக்கு கடிதம் அனுப்பி உள்ளேன். விரைவில் ஊழியர்கள் நியமித்து சன்னதிகள் திறந்து பூஜைகள் நடத்தப்படும். சன்னதியில் பணி நேரத்தில் இல்லாத ஊழியர்கள் மீது நடவடிக்கைப்படும் என்றார்.