பதிவு செய்த நாள்
31
ஆக
2017
11:08
பொள்ளாச்சி : பொள்ளாச்சி, வடசித்துார் அருகே, மண்ணில் புதைந்திருந்த ’சூலம்’ பொறித்த நடுகலில், சிவன் கோவிலுக்கு நில தானம் செய்தது பற்றி கல்வெட்டு தகவல்கள் உள்ளன. நெகமம் அடுத்துள்ள குருநல்லிபாளையத்தில், காலபைரவர் கோவில் உள்ளது. மிகப்பழமையான கோவிலில் மாதந்தோறும் தேய்பிறை அஷ்டமி நாளன்று பைரவருக்கு சிறப்பு பூஜை நடக்கிறது.கோவிலுக்கு எதிரே, தோப்புக்குள் பழங்கால விநாயகர் கோவிலும், அதன் எதிரே, மண்ணில் பாதி புதைந்த நிலையில், நடுகல் ஒன்றும் விவசாயிகளால் மீட்கப்பட்டுள்ளது.
கல்வெட்டில் குறுநீலி எனும் கிராமம், கோவில் ஒன்றுக்கு தேவதானமாக கொடுக்கப்பட்டதால், பொதுமக்கள் செலுத்தும் வரிகள் அனைத்தும் கோவிலுக்கே பயன்படுத்தக்கூடியது எனும் பொருள்பட கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.கல்வெட்டின் மேற்பகுதியில் உள்ள எழுத்துக்கள் சிதைந்துள்ளது. கல்வெட்டில், தேவதானம் எனும் சொல் சிவன் கோவிலுக்கு உரியது என பொருள்படுகிறது.ஆனால், கிராமத்தில் சிவன் கோவில் இல்லை. அருகில் உள்ள தேவனாம்பாளையத்தில் அமணலிங்கேஸ்வரர் கோவில் இருப்பதால், அக்கோவிலுக்கு உரிய கல்வெட்டாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.தற்போதுள்ள குருநல்லிபாளையம் கிராமம், கல்வெட்டில் ’குறுநீலி’ எனும் பெயரில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேவணாம்பாளையம் சிவன் கோவிலில் எட்டு கல்வெட்டுகள் இருக்கின்றன. அவை கொங்கு சோழர்களில் ஒருவரான மூன்றாம் விக்கிரமசோழன் கால கல்வெட்டுகளாகும்.கோவிலில் மிகப்பெரிய அளவில் திருப்பணிநடைபெற்றிருக்க வேண்டும் என்ற தகவலும் கல்வெட்டில் அறியப்படுகிறது.தற்போது, கல்வெட்டை கிராம மக்கள் மட்டுமன்றி, காலபைரவர் கோவிலுக்கு வருபவர்களும் பூஜை செய்து வழிபட்டுச்செல்கின்றனர்.காலவைரவர் கோவில் நிர்வாகிகள் கூறுகையில், ’தற்போதுள்ள குருநல்லிபாளையம், முன் காலத்தில் காலபைரவர் கோவிலின் தென்பகுதியில் அமைந்திருந்ததாகவும், காலப்போக்கில் குறுநீலி கிராமம் மறைந்து, சற்று துாரத்தில் குருநல்லிபாளையமாக அமைந்ததாகவும் கூறப்படுகிறது.தோப்புக்குள் உள்ள பழமையான விநாயகர் கோவிலும், கண்டெடுக்கப்பட்ட சூலம் பொறித்த நடுகல்லும் இதற்கான சாட்சிகளாக உள்ளன. நடுகல்லின் பின் பகுதியில் சிவன் கோவில் நில தானம் குறித்த பல்வேறு தகவல்கள் பொறிக்கப்பட்டுள்ளன,’ என்றனர்.