பதிவு செய்த நாள்
26
செப்
2017
11:09
திருப்புவனம்: திருப்புவனம் அருகே வடகரையைச் கிராம மக்கள் திருச்செந்துார் முத்தாலம்மன் கோயில் தசரா விழாவிற்காக பல்வேறு வேடமணிந்து பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்த உள்ளனர்.திருச்செந்துார் அருகே குலசேகரபட்டினத்தில் உள்ள முத்தாலம்மன் கோயிலில் வரும் 30ம் தேதி தசரா விழா நடைபெற உள்ளது. இதற்காக பக்தர்கள் பல்வேறு வேடங்கள் அணிந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். திருப்புவனம் அருகே வடகரையில் காட்டுநாயக்கன் இனத்தைச் சேர்ந்த ஏராளமானவர்கள் வசித்து வருகின்றனர்.
வருடம்தோறும் தசரா விழாவிற்கு வேடங்கள் அணிந்து செல்வது வழக்கம். தசரா விழாவில் வேடமணிந்து பங்கேற்க உள்ள பக்தர்கள் வேடங்களுக்கு தகுந்தவாறு விரதமிருப்பது வழக்கம். காளி வேடமணிபவர்கள் 90 நாட்களும் மற்ற வேடமணிபவர்கள் 21 நாட்கள் விரதமிருப்பார்கள், விபத்துக்கள், நோய் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள், குழந்தை வரம் வேண்டுபவர்கள், திருமண தடை நீங்கியவர்கள் என பலரும் முத்தாலம்மனுக்கு நன்றி செலுத்த வேடமணிவது வழக்கம், இந்தாண்டு விபத்தில் சிக்கி உயிர் பிழைத்த சிலர் உடலில் காயமடைந்து கட்டு போட்டது போல வேடமணிந்து இருந்தனர். ஒருசிலர் ராணி வேடமும், சிலர் கருங்காளி, விநாயகர், முருகன், அனுமர் வேடமும் அணிந்து இருந்தனர்.
மாலதி என்பவர் கூறியதாவது: தசரா விழாவில் பங்கேற்க செங்காளி வேடமணிந்துள்ளேன், இதற்காக 90 நாட்கள் விரதமிருந்துள்ளேன். திருவிழாவில் பங்கேற்க நாளை கிளம்புகிறோம். இந்தாண்டு 55 பேர் வேடங்கள் அணிந்துள்ளோம், இற்தகாக மூன்று நாட்களும் வேடமணிந்து திருப்புவனம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் யாசகம் கேட்பது வழக்கம் கிடைக்கும் காணிக்கைகளை அப்படியே முத்தாலம்மன் உண்டியலில் சேர்த்து விடுவது வழக்கம், என்றார்.