பதிவு செய்த நாள்
28
செப்
2017
12:09
திருத்தணி: திருத்தணி முருகன் கோவில், கணக்குகள் மற்றும் கோப்புகள், கணினியில் பதிவு செய்தல், அனைத்து சேவைகள் மற்றும் விடுதிகள் இணையதளம் மூலம் பதிவு செய்வதால், ஊழியர்களுக்கு கணினி பயிற்சி வழங்கும் நிகழ்ச்சி துவக்கப்பட்டுள்ளது. திருத்தணி முருகன் கோவிலுக்கு, 29 துணைகோவில்கள் உள்ளன. இதுதவிர, முருகன் கோவிலுக்கு தலைமை அலுவலகம் திருத்தணியில் உள்ளது. இங்கு, 48 ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். சில ஆண்டுகளாக கோவில் நிர்வாக வரவு - செலவு கணக்குகள், கணினியில் பதிவு செய்யப் படுகின்றன. இது தவிர, பக்தர்கள் தங்கும் தேவஸ்தான விடுதிகள், திருத்தணி, மத்துார், திருவாலங்காடு ஆகிய கோவில்களில் நடைபெறும் அனைத்து சேவை டிக்கெட்டுகள், இணைய தளத்தில் பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது, கோவில் கணக்குகள் மற்றும் கோப்புகளும் கணினியில் பதிவு செய்யும் பணிகள், துரித வேகத்தில் நடந்து வருகின்றன.இந்த நிலையில், கோவில் தலைமை அலுவலகம், விடுதிகள் மற்றும் மலைக்கோவில் ஆகிய இடங்களில் பணிபுரியும் பெரும்பாலான ஊழியர்களுக்கு கணினி பற்றி தெரியாது.இதையடுத்து, கோவில் தக்கார், தன் சொந்த செலவில், மூன்று கணினி இயந்திரம் மற்றும் இரண்டு லேப் டாப் மூலம் முதற்கட்டமாக, 48 ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சி நேற்று துவங்கப்பட்டது.
இது குறித்து கோவில் தக்கார் ஜெய்சங்கர் கூறியதாவது:அனைத்து கணக்குகளும் கணினி மயமாக்கப்பட்டுள்ளன. இதனால், கணினி குறித்து தெரியாத ஊழியர்களுக்கு, மொத்தம், 45 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. ஒரு குழுவிற்கு, 12 ஊழியர்கள் என, பிரித்து, தனித்தனியாக, 48 ஊழியர்களுக்கு, கணினி பயிற்சி அளிக்கப்படுகிறது. இவர்களுக்கு பயிற்சி முடிந்ததும், மற்ற ஊழியர்களுக்கும், படிப்படியாக கணினி பயிற்சி அளிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.