பதிவு செய்த நாள்
28
செப்
2017
12:09
அறநிலையத்துறையின், வேலுார் மண்டலத்தில், காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலுார் ஆகிய மாவட்டங்கள் அடங்கியுள்ளன. இந்து அறநிலைத்துறை இணை ஆணையர் கட்டுப்பாட்டில் இந்த மூன்று மாவட்ட கோவில்கள் நிர்வாகம் செய்யப்படுகின்றன. இந்த, பட்டியலில் சேராத கோவில்கள் உதவி ஆணையர் கட்டுப்பாட்டில் உள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில், இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், 1,389 கோவில்கள் உள்ளன. அதில் ஆண்டு வருமானத்தை பொறுத்து, பட்டியல் சார்ந்த கோவில்கள் இணை ஆணையர் கட்டுப்பாட்டிலும் பட்டியல் சாராத கோவில்கள் உதவி ஆணையர் பராமரிப்பிலும் இருக்கிறது.
இவர்களை தவிர, முக்கிய கோவில்களுக்கு செயல் அலுவலர் ஒருவரும் உள்ளனர். கிராமப்புர கோவில்களை பாதுகாக்க ஆய்வாளர்களும் உள்ளனர். இந்த அதிகாரிகள் நிர்வாகத்தில் கீழ் கோவில்களில் தினசரி பூஜை, பிரமோற்சவம், கோவில் திருப்பணி, கும்பாபிஷேகம் போன்றவை நடக்கிறது. இதை தவிர, மாவட்டத்திற்கு ஒரு பொறியாளர், மண்டலத்திற்கு ஒரு ஸ்தபதி இருக்க வேண்டும். ஆனால், இருந்த ஒரு பொறியாளர் ஓய்வு பெற்ற பின், பல ஆண்டுகளாக வேறு ஒருவர் நியமிக்கவில்லை.ஒரு கோவில் வேலை, பாதியில் நிறுத்தப்பட்டால் மறு மதிப்பீடு செய்து, அந்த பணியை முழுமையாக முடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கு, ஏகாம்பரநாதர் கோவில் இரட்டை திரு மாளிகை மண்டபம் இரு ஆண்டுகளுக்கு முன் சீரைமைப்பு பணி துவங்கப்பட்டது. அதற்கு, 1.66 கோடி ரூபாய், மூன்று தவணைகளாக நிதி வழங்கப்பட்டன. அந்த பணியும் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. சில கோவில்களில் நிதி வசதி இருந்தும் வேலையே நடக்காமல் இருக்கிறது.
செயல் அலுவலர்கள் இல்லாத கோவில்கள்: காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள், வழக்கறுத்தீஸ்வரர், கோவிந்தவாடி அகரம் தட்சணாமூர்த்தி கோவில், குன்றத்துார் திருநாகேஸ்வரர் கோவில், படப்பை, மாமல்லபுரம் தலசயனப்பெருமாள்.
மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோவில், கடம்பர் கோவில், மலைவையாவூர் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவில், திருப்புட்குழி விஜயராகவப் பெருமாள் ஆகிய கோவில்களில் செயல் அலுவலர்கள் இன்றி கூடுதல் பொறுப்பு வகித்து வருகின்றனர்.
கூடுதல் சுமையால் அவதி: மாவட்டத்தில் பாரம்பரியமான இந்து கோவில்கள் பல உள்ளன. இதில் பாடல் பெற்ற தலங்கள், திவ்வியதேச கோவில்களும் அடங்கும். ஒரு செயல் அலுவலர் பிரதான கோவிலுடன், அதனுடன் தொடர்புடைய உப கோவில்கள், 10 முதல், 30 கோவில்கள் வரை நிர்வாகம் செய்ய வேண்டியுள்ளது. அதனால் அவர்களுக்கும் கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது.
கோவில்கள் திருப்பணி பாதிப்பு: எந்த கோவிலில் திருப்பணி நடந்தாலும், அதற்கு முன் அறநிலையத்துறை பொறியாளர் அதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்து, வழங்கிய பின் தான் நிதி ஒதுக்கப்பட்டு பணி துவங்கும். மாவட்டத்திற்கு ஒருவர் இருக்க வேண்டிய இடத்தில், மூன்று மாவட்டத்திற்கும் சேர்த்து ஒருவர் மட்டும் இருந்தார். அவரும் ஒய்வு பெற்ற பின் பல ஆண்டுகளாக அந்த இடம் காலியாக உள்ளது. இதனால், கோவில்களில் சீரமைப்பு பணிகள் தடை ஏற்பட்டுள்ளன. அவசரத்திற்கு ஓய்வு பெற்ற பொறியாளர் ஒருவரை அழைத்து வேலை நடந்து வருகிறது. அந்த ஒருவரும் மூன்று மாவட்டத்திலும் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்களுக்கு மதிப்பீடு செய்வது முடியாத காரியமாக இருக்கிறது. இதனால் மாவட்டத்தில் நுாற்றுக்கும் மேற்பட்ட கோவில்கள் சீரமைப்பு பணி, திருப்பணிகள் நடைபெறாமல் உள்ளன.