பதிவு செய்த நாள்
19
அக்
2017
01:10
தலைவாசல்: தலைவாசல் அருகே, கோவில் தெப்பக்குளம் பல ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியுள்ளதால், பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தலைவாசல், காட்டுக்கோட்டை அருகே உள்ளது வடசென்னிமலை. இதன் உச்சியில் அமைந்துள்ள பாலசுப்ரமணிய சுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு தைப்பூசம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம் உள்பட பல்வேறு விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. மலை அடிவாரத்தில், கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளம் உள்ளது. கோவில் விழாக்களுக்கு இங்கு நீர் எடுத்து செல்வது வழக்கம். தலைவாசல் பகுதியில், சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், நீரின்றி வறண்டு கிடந்த தெப்பக்குளம், தற்போது நிரம்பி காணப்படுகிறது. இதன் ஓரங்களில், பிளாஸ்டிக், தெர்மாகோல் உள்ளிட்டவை கிடப்பதால், நீர் மாசுபடும் அபாயம் உள்ளது. குளம் நிரம்பியுள்ளதால், அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. கோவில் வளாகங்களில் பழுதடைந்து இருக்கும், கைவிசை பம்புகளை சரி செய்தால், பக்தர்கள் பயன்படுத்த ஏதுவாக இருக்கும். அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.