தேனி: மாவட்டத்தின் பல்வேறு பகுதி முருகன் கோயில்களில் இன்று மாலை கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடக்கிறது. தேனி என்.ஆர்.டி., நகரில் உள்ள கணேச கந்த பெருமாள் கோயிலில் கந்த சஷ்டி விழாவை அக்.20ல் துவங்கியது. பக்தர்கள் காப்பு கட்டி விரதம் துவக்கினர். தினமும் சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. நேற்று சுவாமிக்கு விபூதி அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர். இன்று மாலை 4:30 மணிக்கு சூரசம்ஹாரம் நடக்கிறது.
*பங்களாமேடு மீனாட்சி சுந்தரேஸ்வர் கோயிலில் கந்த சஷ்டி விழாவை ஒட்டி தினமும் சுப்பிரமணியர் வள்ளி –தெய்வானைக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது. இன்று மாலை 5:45 மணிக்கு சூரசம்ஹாரமும்,6:15 மணிக்கு பால்குடம், மாவிளக்கு, சிறப்பு அபிேஷக, ஆராதனை நடக்கிறது.
பெரியகுளம்: பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலில் ஏராளமான பக்தர்கள் கந்த சஷ்டி விரதம் மேற்கொண்டுள்ளனர். தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. முக்கிய விழாவான சூரசம்ஹாரம் இன்று மாலை 4:00 மணிக்கு நடக்கிறது. பாலசுப்பிரமணியர் வெற்றிவேல் தேரில் எழுந்தருளி, சூரர்களை வதம் செய்கிறார். நாளை மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாணம் ,விருந்துநடக்கிறது. ஏற்பாடுகளை மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.