பதிவு செய்த நாள்
26
அக்
2017
12:10
தேனி, மாவட்டத்தின் பல்வேறு பகுதி முருகன் கோயில்களில் நேற்று மாலை கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சுவாமி, சூரனை வதம் செய்த சூரசம்ஹாரம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தேனி கணேசகந்த பெருமாள் கோயில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பெரியகுளம் ரோடு வேல்முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா அக்.20ல் துவங்கியது. பக்தர்கள் காப்புகட்டி விரதம் துவக்கினர். தினமும் சுவாமிக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. அனைத்து கோயில்களிலும் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நேற்று மாலை நடந்தது. ஆணவம் கொண்டு போரிட்ட சூரனை, முருகன் சம்ஹாரம் செய்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்று திருக்கல்யாணம் நடக்கிறது.
*பெரியகுளம் பாலசுப்ரமணியர் கோயிலில் சூரசம்ஹாரம் நடந்தது. நான்கு இடங்களில் சூரனை, சுவாமி வதம் செய்தார். கூடலுார்: கூடலுார் கூடல் சுந்தரவேலவர் கோயிலில் கந்த சஷ்டி விழாவின் ஆறாம் நாளான நேற்று காலையில் பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். இதனைத் தொடர்ந்து சுந்தரவேலவருக்கு பால் அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து துர்க்கை அம்மனுக்கு சக்தி அபிஷேகமும், மாலை சக்திவேல் வாங்குதல் நிகழ்ச்சியும் நடந்தது. இதன்பின், சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மகளிர் குழுவினரின் தெய்வீகக் கூட்டு வழிபாடு பிரார்த்தனை நடந்தது. இன்று காலையில் சுந்தரவேலவருக்கு திருக்கல்யாணம், மாலையில் மயில்வாகனத்தில் சுவாமி எழுந்தருளுதல் நிகழ்ச்சியும் நடக்கிறது.
கம்பம்: கம்பம் வேலப்பர் கோயிலில் கந்த சஷ்டி விழாவில் சுவாமிக்கு தினமும் அலங்காரம், சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. நேற்று காலை காப்பு கட்டிய நுாற்றுக்கணக்கான பெண்கள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக பால்குட ஊர்வலம் நடத்தினர். பின்னர் கோயிலில் சுவாமிக்கு பாலாபிேஷகம் ,தீபாராதனை நடந்தது. மாலையில் சூரனை, முருகன் வதம் செய்த சூரசம்ஹாரம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
போடி: போடி சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவையொட்டி சுவாமிக்கு தினமும் சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. நேற்று முருகன் வேல்வாங்கும் நிகழ்ச்சி, சூரசம்ஹாரம் நடந்தது. காமராஜ் பஜார், தேரடி தெரு, கீழத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் சுவாமி வலம் வந்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்று காலை 10:00 மணிக்கு மேல் தேவசேனா சுப்பிரமணியர் சுவாமி திருக்கல்யாணம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை தக்கார் கிருஷ்ணவேணி செய்துள்ளார். -ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரம் விநாயகர், கந்தநாதன், தண்டபாணி கோயில்களில் கந்த சஷ்டி விழாவில் , சுவாமி ஊர்வலமும் பக்தர்கள் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் நடந்தது. தினமும் பக்தர்கள் சார்பில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. நேற்று நடந்த சூரசம்ஹார நிகழ்ச்சிக்குப்பின் கந்தநாதர் சுவாமிக்கு சிறப்பு அபிேஷகங்கள் ,ஆராதனைகள் நடந்தது. கோயில் சார்பில் பக்தர்களுக்கு பருப்பு நீர் வழங்கப்பட்டது. இன்று மாலை 5:00 மணிக்கு கந்தநாதன் திருக்கல்யாணம், சுவாமி ஊர்வலம், இரவு 10:00 மணிக்கு சிறப்பு பூஜை மற்றும் விரதம் முடித்தல் நிகழ்வும், அன்னதானமும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் விழாக் குழுவினர் செய்துள்ளனர்.