பதிவு செய்த நாள்
06
நவ
2017
12:11
கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் அடுத்த போத்தாபுரம் கிராமத்தில், விஜய நகர கால கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த போத்தாபுரம் கிராமத்தில், பெரிய கற்பலகை உள்ளதாக, அக்கிராமத்தை சேர்ந்த செந்தில் என்பவர், கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியக அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, காப்பாட்சியர் கோவிந்தராஜ் மற்றும் பணியாளர்கள், கல்வெட்டை ஆய்வு செய்தனர். ஆய்வில், அந்த கல்வெட்டு, விஜயநகர கால கல்வெட்டு என்பது தெரிந்தது.
இதுகுறித்து காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது: இந்த கல்வெட்டு, விஜய நகர மன்னன் முதலாம் தேவராயனின் ஆட்சிக்காலத்தில், கி.பி.,1407ல் பொறிக்கப்பட்டுள்ளது. இதில், பிராமணர்களுக்கு, பையூர் பற்றின் வரதசமுத்திரம் என்கிற பகுதியில் தானமாக வழங்கப்பட்ட பிரமதேய நிலத்தையும், அதன் எல்லைகளும் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலப்பரப்பு, 19 பகுதிகளாக பிரிக்கப்பட்டு, இரண்டு பாகங்கள் கோவிலுக்கும், 17 பாகம் பல்வேறு கோத்திரங்களை சேர்ந்த பிராமணர்களுக்கும் பிரித்து அளிக்கப்பட்டுள்ளன. இந்த தானத்தை, பையூர் சீமையை நாயக்கம் செய்து வந்த, இம்மடி நாயக்கர் என்பவர் வழங்கியுள்ளார். இதுவரை கூளிமாராய நாயக்கன், பொம்மைய நாயக்கன், திம்மைய நாயக்கன் போன்ற ஒரு சிலரை பற்றி மட்டுமே கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன. தற்போது கண்டறியப்பட்டுள்ள கல்வெட்டு வாயிலாக, காடைய நாயக்கர், வரதய நாயக்கர், ஒருபரி நாயக்கர், இம்மடி நாயக்கர் ஆகியோரின் வரலாறும் தெரிய வந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.