பதிவு செய்த நாள்
14
நவ
2017
11:11
ஆத்தூர்: ஆத்தூர் அருகே, சின்ன கல்வராயன்மலை பகுதியில், 6,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட புதிய கற்கால கருவிகளை, சேலம் வரலாற்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். சேலம் வரலாற்று ஆய்வுமைய ஆய்வாளர்கள் பொன்.வெங்கடேசன், பெருமாள், கலைச்செல்வன், பொன்னம்பலம், சீனிவாசன் உள்ளிட்ட குழுவினர் கடந்த அக்., 8ல், சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, சின்ன கல்வராயன்மலையில் உள்ள மேல்பாச்சேரி, தாழ்பாச்சேரி மலை கிராமகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது: மேல்பாச்சேரி விநாயகர் கோவிலில், 50க்கும் மேற்பட்ட புதிய கற்கால கருவிகள் கண்டறியப்பட்டன. இதன் மூலம், முன்பு அங்கு வாழ்ந்த மக்களின் வாழ்கை நிலையை அறிய முடிகிறது. இங்கு கிடைத்துள்ள கற்கருவிகள், புதிய கற்கால வகையை சேர்ந்தது. புதிய கற்காலமானது, 6,000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக கருதப்படுகிறது. புதிய கற்கால மக்கள், தனக்கென ஒரு குடியிருப்பு பகுதியை உருவாக்கிக் கொண்டு, ஓரிடத்தில் நிலையாக வாழ்ந்தனர். இவர்கள், குழி வீடுகளிலும், வட்டம் மற்றும் நீள்வட்ட வடிவிலான கோரை புற்கள் வேய்ந்த கூரை வீடுகளிலும் வசித்து, வேளாண் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இக்கால மனிதர்கள்தான், முதன் முதலில் இறந்தவர்களை, தன் வீடுகளுக்கு அருகே அடக்கம் செய்யும் முறையை துவக்கினர். அருநூத்து மலையில் வாழும் மக்களிடம் இன்று வரை, இந்த பழக்கம் தொடர்கிறது. புதிய கற்கால கருவிகளை, வேட்டையாடவும், தானியங்களை அரைக்கவும் பயன்படுத்தியுள்ளனர். கைக்கோடாரி, அம்மிக்கல், குழவிக்கல், கூர்முனை கருவிகள், கத்திகள், வெட்டு கருவிகள், கிழிப்பான்கள், தேய்ப்பு கற்கள் போன்ற வடிவங்களில் இவை கிடைக்கின்றன. மேல்பாச்சேரி கிராமத்தில், விநாயகர் சிலை அருகில், 18 புதிய கற்கால கருவிகள் உள்ளன. இதில், 11 நல்ல நிலையிலும், ஏழு சிறிதளவு சிதைந்த நிலையிலும் உள்ளது. இவற்றின் நீளம், 15 செ.மீ., அகலம், 10 செ.மீ., மற்றும், 33 செ.மீ., நீளமுடைய குழவிக்கல் ஒன்றும் உள்ளது. இக்கருவிகள், இன்றளவும் மக்கள் வழிபாட்டில் உள்ளது. வேட்டையாடுவது குறைந்தாலும், திருவிழாவின்போது இக்கருவிகளை சுத்தம் செய்து வழிபாடு செய்கின்றனர். தவிர, பழமையான துர்க்கை, காளி சிற்பங்கள் ஒரே கல்லில் புடைப்பாக செதுக்கப்பட்டு, வழிபாட்டில் உள்ளது. தாழ்பாச்சேரி கிராமத்தில், ஒரு மரத்தின் அடியில் உள்ள விநாயகர் சிலை அருகே, 30க்கும் மேற்பட்ட புதிய கற்கால கருவிகள் உள்ளன. நீரோடை, விவசாய நிலங்களிலும் கற்கருவிகள் உள்ளதாக கிராம மக்கள் கூறுகின்றனர். மேலும் ஆய்வு செய்தால், பல்வேறு தொல்லியல் சான்றுகள் கிடைக்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.