பதிவு செய்த நாள்
06
டிச
2017
05:12
பஞ்ச சபைகளான திருவாலங்காடு, சிதம்பரம், மதுரை, திருநெல்வேலி, குற்றாலம் ஆகிய இடங்களில் நடராஜர்களை தரிசித்திருப்பதுடன், அபிஷேக ஆராதனைகளை கண்டு களித்திருப்பீர்கள். ஆனால், வியாழக் கிழமைகளில் தைப்பூசம் வந்தால் மட்டும் அபிஷேகம் காணும் நடராஜப் பெருமானைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா... அவரைக் காண, திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் காசிநாத சுவாமி கோவிலுக்கு சென்று வாருங்கள். இக்கோவில் வரலாறை, காஞ்சி மகா பெரியவரே எழுதியுள்ளார். மகா பெரியவரின் சொற்பொழிவு அடங்கிய, தெய்வத்தின் குரல் புத்தகத்தின் ஏழாம் பாகத்தில், இக்கோவில் வரலாறுக்கென, 23 பக்கங்கள் ஒதுக்கியுள்ளார் என்றால் இதன் சிறப்பை எண்ணிப் பாருங்கள்!
திருவனந்தபுரத்தை ஆண்ட ராஜா ஒருவருக்கு, தீர்க்க முடியாத நோய் ஏற்பட்டது. அந்நோய் குணமாக, அந்தணர் ஒருவருக்கு, எள்ளால் பொம்மை செய்து, அதனுள் தங்கத்தை நிரப்பி தானம் செய்தால், தானம் பெறுபவருக்கு அந்நோய் சென்று, ராஜாவுக்கு நோய் குணமாகி விடும் என்று யோசனை கூறினர், பண்டிதர்கள்.
தங்கம் கிடைக்கிறதே என்பதற்காக, தீராத நோயை தானம் பெற யாராவது முன் வருவரா... ஆனால், கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த பிரம்மச்சாரி அந்தணர் ஒருவர், அந்த தானத்தைப் பெற்றார். பின், காயத்ரி மந்திரத்தால், தான் பெற்ற புண்ணியத்தின் ஒரு பகுதியை அந்தப் பொம்மைக்குள் இறக்க, அது, தன்னில் வைத்திருந்த நோயைப் போக்கடித்தது. பின், தங்கம் அடங்கிய அந்த பொம்மையை வைத்து, பொதுமக்களுக்கு பயன்படும் விதமாக, கால்வாய் வெட்டி, நீர் பாசன வசதி செய்ய ஆசைப்பட்டார். பொதிகையில் வசித்த அகத்தியரின் ஆலோசனைப்படி பணியைத் துவக்க முடிவெடுத்தவர், அதுவரை, தங்கத்தைப் பாதுகாக்க எண்ணி, அம்பாசமுத்திரம் காசிநாத சுவாமி கோவில் அர்ச்சகரிடம் கொடுத்து வைத்தார். உள்ளே துவரம் பருப்பு அளவுள்ள தங்க குண்டுமணிகள் இருப்பதை அறிந்த அர்ச்சகர், அதை எடுத்து, மறைத்து வைத்து விட்டு, துவரம் பருப்பை பொம்மையில் நிரப்பி வைத்தார். கன்னடர் திரும்ப வந்து கேட்ட போது, துவரம் பருப்பு பொம்மையை அர்ச்சகர் கொடுக்க, அதிர்ச்சியான அந்தணர், ராஜாவிடம் முறையிட்டார்.
பொம்மைக்குள் துவரம் பருப்பு தான் இருந்தது என்று அர்ச்சகர் பிடிவாதமாக வாதிட, அது உண்மையானால், தினந்தோறும் நீ அர்ச்சனை செய்யும் சிவன் மீது சத்தியம் செய்... என்று உத்தரவிட்டார், மன்னர். வெறும் லிங்கத்தின் மீது சத்தியம் செய்தால் தனக்கு ஏதும் ஆகாது என கணித்து, சிவனின் சக்தியை கோவிலில் உள்ளேயிருந்த புளியமரத்தில் ஆவாகனம் செய்து விட்டார், அர்ச்சகர். ஆனால், இந்த விஷயத்துக்காக லிங்கத்தின் மீது சத்தியம் செய்ய வேண்டாம்; இதோ, அவரது இருப்பிடத்திலுள்ள புளியமரத்தின் மீது சத்தியம் செய்தால் போதும்... என, ராஜா சொல்ல, மாட்டிக்கொண்டார், அர்ச்சகர். வேறு வழியின்றி புளிய மரத்தின் மீது கை வைத்து பொய் சத்தியம் செய்ய, மரம் தீப்பற்றியது. தீயில் சிக்கி இறந்தார், அர்ச்சகர். பின், சிவனை வணங்கி, அவரை உயிர்ப்பித்தார், அந்தணர். இதனால், சிவனுக்கு எரிச்சாவுடையார் என்ற பெயர் ஏற்பட்டது. இத்தகைய சிறப்புக்குரிய இக்கோவிலில் இருக்கும், புனுகு சபாபதி என்னும் நடராஜருக்கு, வியாழக்கிழமையுடன் கூடிய தைப்பூசத்தன்று மட்டுமே அபிஷேகம் நடக்கும். ஏழு அல்லது எட்டு ஆண்டுக்கு ஒருமுறை தான் இந்த அபூர்வ நாள் வரும். இதனால், இப்பகுதி மக்கள் தங்கள் வீட்டுக்கு அபூர்வமாக யாராவது விருந்தினர் வந்தால், காசியப்பரைக் கண்டது போல் இருக்கே... என்பர். நடராஜரை, காசியப்பர் என்று சொல்வது இவர்களது வழக்கம்.
அது மட்டுமல்ல, இங்குள்ள நவக்கிரக மண்டபத்திலுள்ள, ராகு, தன் வடக்கு திசைக்கு பதிலாக தெற்கு நோக்கி அருள்கிறார். காரணம், கோவிலுக்கு தெற்கே ஓடும் தாமிரபரணியின் அழகை ரசிப்பதற்காக என்கிறது தலபுராணம். இக்கோவிலில், அம்பாள் மரகதாம்பிகை உட்பட, 173 பரிவார மூர்த்திகளின் சிலைகள் உள்ளன. திருநெல்வேலி - பாபநாசம் சாலையில், 35 கி.மீ., துாரத்தில் அம்பாசமுத்திரம் உள்ளது. இங்குள்ள தாலுகா அலுவலகத்தில் இருந்து தெற்கே செல்லும் சாலையில், 1 கி.மீ., துாரத்தில் இருக்கிறது, கோவில்! தொடர்புக்கு: 98423 31372 - 04634 - 253921.