பதிவு செய்த நாள்
25
டிச
2017
12:12
நாமக்கல்: நாமக்கல், ரங்கநாதர் கோவிலில் வரும், 29ல், வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு வழங்குவதற்காக, 54 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணி துவங்கியுள்ளது.
நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர், நரசிம்மர், ரங்கநாதர் கோவில்கள் உள்ளன. இங்கு சுவாமி தரிசனம் செய்ய, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருவர். அதில் பிரதான சாலையில் உள்ள ரங்கநாதர்கோவிலில், ஆண்டுதோறும் மார்கழி மாதம் வரும் ஏகாதசி அன்று சொர்க்கவாசல் திறக்கப்படும். இந்தாண்டு வரும், 29ம் அன்று அதிகாலை, 4:30 மணியளவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, பரமபதம் வழியாக சுவாமியில் ஜடாரி எடுத்து வரப்படும். அதை முன்னிட்டு, சுவாமியை தரிசனம் செய்யவரும் பக்தர்களுக்கு வினியோகிப்பதற்காக, 54 ஆயிரம் லட்டுகள் தயார் செய்யப்படுகிறது. ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில், மணிக்கட்டிப்புதூரை சேர்ந்த நடேசன், ஜெயமணி ஆகியோர் தலைமையில், 15 பேர் கொண்ட குழுவினர் லட்டு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து நடேசன் கூறியதாவது: ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவிற்கு, சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்காக, பக்தர் ஒருவர், ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பில், 54 ஆயிரம் லட்டுகளை வழங்குகிறார். அதற்காக கடலை மாவு, 800 கிலோ, சர்க்கரை,1,600 கிலோ, நெய், 225 கிலோ ரீபைண்ட் ஆயில், 49 கிலோ, திராட்சை, 30 கிலோ, முந்திரி, 50 கிலோ, கல்கண்டு, 25 கிலோ, லவங்கம் இரண்டு கிலோ பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். ஏற்பாடுகளை, இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர்கள் வெங்கடேஷ், ரமேஷ் ஆகியோர் செய்கின்றனர்.