பதிவு செய்த நாள்
27
டிச
2017
12:12
திருவண்ணாமலை: நீர் நிலைகளை பாதுகாக்கும் நோக்கில், நீர் துளிகள் இயக்க அமைப்பை சேர்ந்த இளைஞர்கள், கிரிவலப்பாதையில் உள்ள குளங்களை தூர்வாரி, சேவை செய்து வருகின்றனர்.
திருவண்ணாமலை, கிரிவலப்பாதையில், 365 தீர்த்த குளம் இருந்ததாக கூறப்படும் நிலையில், தற்போது, 120 குளங்கள் மட்டுமே உள்ளன. இவற்றில், 100க்கும் மேற்பட்ட குளங்கள், தூர் வாரப்படாமல், புதர் மண்டி கிடக்கின்றன. கடந்த, ஒன்றரை ஆண்டுக்கு முன், நீர் நிலைகளை பாதுகாக்கும் நோக்கில், 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒருங்கிணைந்து, ராகவன் என்பவர் தலைமையில், நீர் துளிகள் இயக்கம் என்ற அமைப்பை உருவாக்கி, முதலில் பூமாந்தா குளத்தை தூர்வாரும் பணியை துவங்கினர். பின், அடுத்தடுத்து பல்வேறு குளங்களை தூர் வாரினர். தற்போது, தர்மராஜா குளத்தை தூர்வாரி வருகின்றனர். இதுகுறித்து நீர் துளிகள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ராகவன் கூறியதாவது: கிரிவலப்பாதையை சுற்றிலும், 365 குளங்கள் இருந்துள்ளன. ஒரு காலத்தில், ஒவ்வொரு நாளும், ஒரு குளத்தில் இருந்து நீர் எடுத்துச் சென்று, அண்ணாமலையாருக்கு அபிஷேகம் செய்து, பூஜை நடந்துள்ளது.
காலப்போக்கில் இது கைவிடப்பட்டுள்ளது. திருவண்ணாமலையை சுற்றியிருந்த பல குளங் கள் காணாமல் போய் விட்டன. தற்போது, 120 குளங்கள் மட்டுமே கண்டறியப்பட்டுள் ளன. கிரிவலப்பாதையில் உள்ள தீர்த்த குளங்கள், பல மகிமைகள் கொண்டவை. இதில் மூழ்கி குளித்தால், பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என்பதால், முதற்கட்டமாக, எட்டு தீர்த்த குளங்களை தூர் வாரியுள்ளோம். தற்போது, தர்மராஜா தீர்த்த குளத்தை தூர்வாரி வருகிறோம். தூர்வாரப்பட்ட தீர்த்த குளங்களை பக்தர்கள் நீராடி செல்லும் வகையில், அனைத்து வசதிக ளையும், இந்து அறநிலையத்துறை, மாவட்ட நிர்வாகம் செய்து தர வேண்டும். தொடர்ந்து குளங்களை தூர்வாரும் பணியில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.