பதிவு செய்த நாள்
28
டிச
2017
12:12
திருச்செங்கோடு: திருச்செங்கோட்டிலிருந்து, திருமலை திருப்பதி வைகுண்ட ஏகாதசி விழாவுக்கு, 5,000 கிலோ மலர்களை, பக்தர்கள் மாலைகளாக தொடுத்து, அனுப்பி வைத்தனர். சேலம் மாவட்டம், கொங்கணாபுரத்தைச் சேர்ந்த திருமலை திருப்பதி ஸ்ரீமன் நாராயணா நித்ய புஷ்ப கைங்கர்ய சபா டிரஸ்ட் சார்பில், ஆண்டுதோறும், திருமலை வைகுண்ட ஏகாதசிக்கு, பூக்கள், மாலைகளாக தொடுக்கப்பட்டு, அனுப்பப்படுகின்றன. அதன்படி, இந்தாண்டு, நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அகரமஹால் திருமண மண்டபத்தில், வைகுண்ட ஏகாதசிக்கு, மணமுள்ள மலர்களை மாலைகளாக தொடுக்கும் நிகழ்வு நடந்தது. டிரஸ்ட் நிர்வாகிகள் சந்திரசேகர், கனகராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். பக்தர்கள் வழங்கிய சம்பங்கி, மஞ்சள், சிவப்பு, சாமந்தி பூக்கள், தாமரை, மரிக்கொழுந்து உள்ளிட்ட, ஐந்து டன் எடையுள்ள பல வண்ண பூக்களை, பெண்கள் மாலைகளாக தொடுத்தனர். அவற்றுடன், கரும்பு தென்னம்பாளை, தென்னங்குருத்து, இளநீர், பாக்கு குலைகள், மாங்கொத்துகள் மற்றும், 10 ஆயிரம் ரோஜாசெடிகளும், நேற்று மாலை, திருமலைக்கு லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டன.