கழுமரம் சிதம்பரேஸ்வரர் கோவிலில் தினசரி பூஜை நடத்த வழி பிறக்குமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19டிச 2011 12:12
திருக்கோவிலூர் : கழுமரம் சிதம்பரேஸ்வரர் கோவிலில் தினசரி பூஜை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள் முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர். திருக்கோவிலூர் அடுத்த கழுமரம் கிராமத்தில் 900 ஆண்டுகள் பழமைவாய்ந்த சிதம்பரேஸ்வரர் கோவில் உள்ளது. இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலுக்கு கழுமரம், சொரையப்பட்டு, தேவரடியார்குப்பம், அருதங்குடி உள்ளிட்ட கிராமங்களில் 37 ஏக்கர் நிலம் உள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு 75 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் வருகிறது. இருந்தாலும் சிதிலமடைந்த இக்கோவிலை புதுப்பிக்க அறநிலையத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பக்தர்களின் முயற்சியால் கடந்த 2008ம் ஆண்டு கோவில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப் பட்டது. அதன் பிறகு அறநிலையத்துறை சார்பில் குருக்கள், நியமிக்கப்பட்டு கோவிலுக்கு விளக்கு ஏற்றுவது, பூஜை செய்ய சம்பளமாக மாதம் ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. விளக்கு ஏற்றுவதற்கு எண்ணெய் வாங்குவதற்குகூட இந்த பணம் போதாத நிலை உள்ளது. இதனால், விழா நாட்களில் மட்டுமே கோவிலை திறக்கும் வழக்கம் ஏற்பட்டுள்ளது. பல ஆயிரம் ரூபாய் வருவாய் உள்ள இக்கோவிலில் தீபத்திருநாளன்று கிராம மக்கள் பணம் வசூலித்து எண்ணெய் வாங்கி விளக்கேற்ற வேண்டிய நிலை அரங்கேறியது. அதே ஊரை சேர்ந்த பக்தர் சிவானந்தம் கூறியதாவது : கோவிலுக்கு 37 ஏக்கர் நிலம் இருந்தும் கோவிலை பராமரிக்காமல் அறநிலையத்துறை அலட்சியம் காட்டி வருகிறது. கிராம மக்களும், பக்தர்களும் சேர்ந்து 70 லட்சம் ரூபாய் செலவில் கோவிலை புதுப்பித்துள்ளோம். கோவில் கும்பாபிஷேகத்திற்கு அறநிலையத்துறை சார்பில் எந்த செலவும் செய்யவில்லை. இந்நிலையில் ஆட்சி மாற்றத்திற்கு இரண்டு மாதத்திற்கு முன்னர் திடீர் என அப்போதய ஆட்சியாளர்களின் பெயர் பொறித்து, திருப்பணி செய்ததாக கல்வெட்டு ஒன்றை கொண்டுவந்து அதிகாரிகள் கோவிலில் வைத்து விட்டுச் சென்று விட்டனர். இவ்வாறு சிவானந்தம் கூறினார். சிதம்பரேஸ்வரர் கோவிலில் தினசரி பூஜை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கழுமரம் கிராம மக்கள் முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளனர்.