பதிவு செய்த நாள்
03
ஜன
2018
12:01
*உன்னை நீ நேசிப்பது போல, மற்றவர்களையும் நேசிக்க வேண்டும். ஏனெனில், நீயே உன்னை மற்றவர்களின் வடிவங்களில் பார்க்கிறாய்.
*நான் யார் என்ற கேள்விக்கான விடையை ஒவ்வொருவரும் கேட்டுக் கொண்டால், உண்மையிலேயே நீ யார் என்ற உண்மையை உணர முடியும். அதுவே ஞானத்திற்கான வழி.
*பிறப்பு, இறப்பு இரண்டுமே உண்மை கிடையாது. எல்லாம் மனதின் கற்பனையே. ஞானம் அடைந்த பிறகு இந்த உண்மையை அறிய முடியும்.
*தன்னைத் தான் அறிந்து கொள்வதே வாழ்க்கை. நீ எவ்விதம் வாழ்க்கையைப் பார்க்கிறாயோ அதைப் பொறுத்தே வாழ்க்கையும் அமையும்.
*துன்பத்தின் இருப்பிடமாக மனம் இருக்கிறது. அது தான் உண்மையான குற்றவாளி.
*நிழல்படம் காண்பிக்கப்படும் திரையில், காட்சிகள் மாறிக் கொண்டே இருப்பது போல, மனதில் எண்ணங்கள் மாறிக் கொண்டே இருக்கிறது. ஆனால், நிகழ்ச்சிகள் மறைந்தாலும், உணர்வுகள் மறைவதில்லை.
*எண்ணத்திற்கு ஏற்ப மனமே எல்லாவற்றையும் உண்டாக்குகிறது. ஒரு பெண், பெண்ணாகத் தான் இருக்கிறாள். ஒரு மனம் அவளை அம்மாவாகவும், மற்றொரு மனம் மனைவியாகவும் பார்க்கிறது.
*ஒருவனுக்கு அமைதியையும், மற்றொருவனுக்கு துன்பத்தையும் தருவதற்கு, கடவுள் ஒன்றும் ஓரவஞ்சனைக்காரர் அல்ல. அவர் தந்துள்ள நல்லவற்றைப் பார்க்க மனிதன் தான் மறுக்கிறான். அழகையும், ஆரோக்கியத்தையும் அவன் தேடுவதில்லை.
*கடவுளை முழுமையாக சரணடைந்து விடு! எல்லா பற்றுகளையும் விட்டு விட முடியும். எல்லா ஆசைகளும் போன பின், கடவுளை அடைய முயற்சி செய்யலாம் என்று காத்திருப்பதால் பயனில்லை. காலம் விரைந்தோடிக் கொண்டே இருக்கிறது.
*மனிதனின் தேவைக்கு ஏற்ப கடவுள் மனிதவடிவிலோ, மற்ற உருவத்திலோ தோன்றி அவனுக்கு வழிகாட்டி ஏற்றுக் கொள்கிறார்.
*மனிதன் தவறான செயல் களில் ஈடுபடுகிறான். பின்னர் நான் என்னும் அகந்தை உணர்வுடன் அதை மறைக்க முயற்சிக்கிறான்.
*தான் செய்யும் வழிபாட்டு முறையை மேலானதாகவும், மற்றவர்களின் வழிபாட்டு முறையைக் கீழானதாகவும் எண்ணுவது கூடாது.
*கடவுளை உணர்ந்து சுகமாக இருக்க வேண்டுமானால் சும்மா இருந்தால் போதும். ஆனால், சும்மா இருப்பதைப் போல சிரமமான காரியம் வேறு கிடையாது.
*உன்னைப் படைத்த சக்தியே இந்தஉலகத்தையும் படைத்தது. உன்னைக் காப்பாற்றும் மகாசக்தி இந்த உலகத்தையும் நிச்சயம் காப்பாற்றும்.
*மரணத்திற்குப் பிறகு என்ன நடக்கும்என்பதை அறிய முற்பட வேண்டாம். நிகழ்காலத்தில் வாழக் கற்றுக் கொள். எதிர்காலத்தை எதிர்காலமே கவனித்துக் கொள்ளும். -ரமணர்