பதிவு செய்த நாள்
03
ஜன
2018
02:01
கோத்தகிரி: நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகரின மக்களின் குலதெய்வமான ெஹத்தையம்மன் திருவிழா, கோலாகலத்துடன் நேற்று துவங்கியது. நீலகிரியில், ஆண்டுதோறும் நடக்கும் இவ்விழாவுக்காக, கடந்த, 25 நாட்களுக்கு முன் நடந்த சக்கலாத்தி என்ற பண்டிகையில் இருந்து, ெஹத்தையம்மன் பக்தர்கள் விரதம் மேற்கொண்டுள்ளனர். ஒவ்வொரு வாரமும், ஞாயிற்று கிழமை, ெஹத்தையம்மன் கோவில் அமைந்துள்ள கிராமங்களில், கத்திகை என்ற அம்மன் அருள்வாக்கு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் கிராமத்தில் உள்ள கோவில்களில் இருந்து, செங்கோல் பக்தர்கள் பாரம்பரிய உடையணிந்து வண்ணக்குடைகளின் கீழ், சற்று தொலைவில் உள்ள மடிமனை என்ற கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். ஒருவாரம் தங்களது வீடுகளுக்கு செல்லாமல், அங்கேயே தங்கி, அம்மனை வழிப்படுகின்றனர்.
பொரங்காடு சீமைக்கு உட்பட்ட, பேரகணி, பெத்தளா, பெப்பேன், தொதநாடு சீமைக்கு உட்பட்ட, ஒன்னதலை, கூக்கல், சின்னகுன்னுார் மற்றும் எப்பநாடு ஆகிய கிராமங்களில் உள்ள கோவில்களில் இருந்து, ஆயிரத்திற்கும் மேற்பட்ட செங்கோல் பக்தர்கள், அந்தந்த மடிமனைக்கு அம்மனை அழைத்து சென்றனர்.மடிமனைகளில், நாள்தோறும் அம்மன் அருள்வாக்கு நிகழ்ச்சி நடக்கிறது. இவ்விழாவின் ஒரு கட்டமாக, கேர்பெட்டா கிராமத்தில் உள்ள சுத்தக்கல் பகுதியில், நேற்றுமுன்தினம் அம்மன் அருள்வாக்கு மற்றும் அன்னதானம் நிகழ்ச்சி நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று காணிக்கை செலுத்தி அம்மனை வழிப்பட்டனர். இவ்விழாவின் ஒருகட்டமாக, இன்று பேரகணி மடிமனையிலும், வெள்ளிக்கிழமை காத்துகுளி மடிமனையிலும், சனிக்கிழமை ஒன்னதலை மடிமனையிலும், விழா நடக்கிறது. இவ்விழாவில், படுகரின மக்களுடன், அனைத்து சமூதாய மக்கள் ஆயிரக்கணக்கில் பங்கேற்கின்றனர். திருவிழா நடக்கும் கிராமங்களில், நாடகம் உட்பட, கேளிக்கை நிகழ்ச்சி நடக்கிறது. ெஹத்தையம்மன் திருவிழாவை முன்னிட்டு, படுகரின மக்கள் வசிக்கும் கிராமங்கள் விழா கோலம் பூண்டுள்ளன.