முதல் யுகமான கிருத யுகத்தில் வாழ்ந்த ஸ்வேத சக்கரவர்த்தி, மகாவிஷ்ணுவின் தரிசனம் வேண்டி தவமிருந்தார். அவர் முன் தோன்றிய நாரதர், மகாவிஷ்ணுவை கூர்ம (ஆமை) அவதார மந்திரம் சொல்லி வழிபடும்படி கூறினார். மன்னனும் அப்படியே செய்ய, சுவாமி கூர்ம அவதார கோலத்தில் காட்சி தந்தார். மகிழ்ந்த மன்னன் தான் பார்த்த ஆமை வடிவத்தை சிலையாக்கி கோவில் எழுப்பினான். இந்த தலம் ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் கூர்மம் என்ற ஊரில் உள்ளது. மூலஸ்தானத்தில் பெருமாள், ஆமை வடிவில் காட்சி தருகிறார். இதற்கு மஞ்சள் காப்பிட்டு பூஜை செய்கின்றனர். ஆமையின் முன்புறம் நாமமும், பின்பகுதியில் சுதர்சன சக்கரமும் உள்ளது. கோயில் அருகில் ஸ்வேத புஷ்கரிணி தீர்த்தம் உள்ளது. இதில் வளரும் ஆமையை பக்தர்கள் வணங்கிச் செல்கின்றனர்.