கோவில்களில் சுவாமிக்கு தயிர்சாதம், வெண் பொங்கல், புளியோதரை என விதவிதமான சாதங்களை நைவேத்யம் செய்வது வழக்கம். ஆனால் திருச்சி மார்க்கெட் பஸ்ஸ்டாப் அருகிலுள்ள பூமிநாதசுவாமி கோவிலில் சேனைக்கிழங்கு, உருளை, கேரட், பீட்ரூட், முள்ளங்கி, வேர்க்கடலை போன்ற பூமிக்கடியில் விளையும் பொருட்களை நைவேத்யம் செய்கின்றனர். இந்தக் கோவில் வாஸ்து தோஷ பரிகாரத்தலமாகத் திகழ்கிறது. வாஸ்து நாளன்று இங்கு யாகபூஜை நடக்கும். அன்று காலையில் சிவன் சன்னதி முன், ஆறு கலசங்களுடன் அக்னி குண்டம் வளர்க்கப்படும். யாகபூஜை முடிந்ததும் கலச தீர்த்தத்தை சுவாமிக்கு மகாபிஷேகம் செய்வர்.