பதிவு செய்த நாள்
08
ஜன
2018
03:01
தஞ்சாவூரில் தயாரிக்கப்படும் தலையாட்டி பொம்மைக்கும், தஞ்சை பெரிய கோவிலுக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும் என்று தானே நினைக்கிறீர்கள்...
இந்த சாதாரண தலையாட்டி பொம்மைக்குள் தான், மிகப் பெரிய தத்துவத்தையே ஒளித்து வைத்துள்ளனர், நம் முன்னோர். கொட்டாங்கச்சி எனப்படும் தேங்காய் சிரட்டையில் பாதியை எடுத்து, அதில், களி மண்ணை அடைத்து, தலையாட்டி பொம்மைகள் செய்யப்படுகிறது. அந்தப் பொம்மையை தரையில் வைத்து, எந்த பக்கம் சாய்த்தாலும், அது, ஆடி ஆடி கடைசியாக நேராக நின்று விடும். சமீபத்தில், தஞ்சை பெரிய கோவில் வளாகத்தில், தண்ணீர் பற்றாக்குறை காரணமாக, போர் போடுவதற்காக, ஆழ்துளை கிணறு தோண்டியுள்ளனர். அப்போது, களிமண்ணோ, செம்மண்ணோ வரவில்லை; வேறு ஒரு வகை மணல் வெளிப்பட்டிருக்கிறது. அது, காட்டாறுகளில் காணப்படக் கூடிய மணல். சாதாரண ஆற்று மணலுக்கும், காட்டாறு மணலுக்கும் வித்தியாசம் உண்டு. சாதாரண ஆற்று மணலை விட, காட்டாறுகளில் காணப்படும் மணலில், பாறைத் துகள்கள் அதிகம் காணப்படும். மேலும், சாதாரண மணலை காட்டிலும் கடினமானது. கோவிலை கட்டுவதற்கு முன், அந்த மணலை அடியில் நிரப்பியுள்ளனர்.
இத்தகவலை அறிந்த, தஞ்சை பெரிய கோவில் மீட்புக் குழுவினரின் முயற்சியால், போர் போடும் வேலை உடனடியாக தடுத்து நிறுத்தப்பட்டது. ஏனென்றால், ஆயிரம் ஆண்டுகளாக இந்த பூமியில் ஏற்படும் அழுத்தங்களையும், நிலநடுக்கங்களையும் தாங்கி, நான்குபுறமும் அகழிகளால் சூழப்பட்டு, கம்பீரமாக காட்சியளிக்கும் இந்த உலக அதிசயத்தின் அஸ்திவாரமே அந்த மணல் தான்! இவ்ளோ பெரிய கோவிலுக்கு, மணலை கொண்டு அஸ்திவாரம் அமைக்க, சோழ தேச பொறியாளர்கள் என்ன முட்டாள்களா! கோவிலின் அதி அற்புத தத்துவமும், சோழர்களின் அறிவின் உச்சமும் அங்குதான் வெளிப்படுகிறது. அகழிகளால் சூழப்பட்டுள்ள தீவு போன்ற அமைப்பில், காட்டாற்று மணலால் கோவிலுக்கு அஸ்திவாரம் அமைக்கப்பட்டுள்ளது. தலையாட்டி பொம்மையை சாய்த்தால், எப்படி கீழே உள்ள கனமான அடிப்பரப்பில் ஆடி ஆடி நேராக நின்று விடுகிறதோ, அதேபோல், பெரிய கோவிலும் எத்தகைய பூகம்பம் வந்து அசைய நேரிட்டாலும், அசைந்து, தானாகவே சம நிலைக்கு வந்து விடும்.
சோழ தேச பொறியாளர்களின் அறிவிற்கு, உலகில் வேறு எவரும் ஈடாகார் என்பதற்கு இது ஒன்றே சான்று!