காஞ்சிபுரம் : உலகளந்தப்பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தில் நேற்று, பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி ராஜ வீதிகளில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காஞ்சிபுரத்தில் சிறப்பு பெற்று விளங்கும், உலகளந்தப்பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் திங்கள் கிழமை கொடியேற்றத்துடன் துவங்கியது. முதல் நாள் காலை, பல்லக்கு வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று மூன்றாம் நாள் முக்கிய விழாவான கருட சேவை உற்சவம் நடந்தது. இதற்காக காலை, 6:00 மணிக்கு பெருமாள் கோவில் எதிரில் உள்ள வாகன மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு அலங்காரம் முடிந்து காலை, 7:30 மணிக்கு தீபாராதனை நடைபெற்றது. இதை தொடர்ந்து, கருட வாகனத்தில் எழுந்தருளிய பெருமாள் நான்கு ராஜ வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மீண்டும், காலை, 9:15 மணிக்கு பெருமாள் கோவிலை சென்றடைந்தார். மாலையில் பெருமாள் அனுமந்த வாகனத்தில் வீதிவுலா நடைபெற்றது.