பதிவு செய்த நாள்
25
ஜன
2018
11:01
சென்னை: பழமை மாறாமல், ஸ்ரீரங்கம் ரங்கநாத பெருமாள் கோவில் திருப்பணிகள், தொன்மையுடன் மேற்கொள்ளப்பட்டதற்காக, யுனெஸ்கோ ஆசியா - பசிபிக் சர்வதேச அமைப்பு, விருது வழங்கி கவுரவித்துள்ளது.
பூலோக வைகுந்தம் என அழைக்கப்படும், ஸ்ரீரங்கம் ரங்கநாத பெருமாள் கோவில், 108 திவ்ய தேசங்களில் முதன்மையானது. 156 ஏக்கர் பரப்பளவிலான இந்த கோவிலில், ஏழு பிரகாரங்கள், மதில் சுவர்கள், 236 அடி உயரம் கொண்ட, 13 நிலை ராஜகோபுரம் உள்ளன. இக்கோவிலுக்கு, 25 கோடி ரூபாய் செலவில், 11 கோபுரங்கள், 43 உப சன்னதிகள் திருப்பணிகள் செய்யப்பட்டு, 2015ல் சம்ரோக் ஷணம் நடத்தப்பட்டது. அதே ஆண்டு நவம்பரில், மூலவர், தாயார், கருடாழ்வார், சக்கரத்தாழ்வார், உடையவர், பிரணவாகார விமானம், தெற்கு ராஜகோபுரம் ஆகியவற்றுக்கு மகா சம்ரோக் ஷணம் நடத்தப்பட்டது. இக்கோவிலில், பழமை மாறாமல், தொன்மையுடன் மேற்கொள்ளப்பட்ட திருப்பணிகளை, யுனெஸ்கோ ஆசியா - பசிபிக் சர்வதேச அமைப்பின் ஒன்பது வல்லுனர்கள் குழு, 2017 ஜூலையில் ஆய்வு செய்தது. இதையடுத்து, இக்கோவிலுக்கு, 2017க்கான, ’அவார்டு ஆப் மெரிட்’ எனும் விருதை வழங்கி உள்ளது. இவ்விருதை, கோவில் அறங்காவலர் குழு தலைவர், வேணு ஸ்ரீனிவாசன் தலைமையிலான அறங்காவலர்கள், முதல்வர் பழனிசாமியிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.