பதிவு செய்த நாள்
25
ஜன
2018
11:01
சேலம்: ரதசப்தமி விழாவையொட்டி, சேலத்தில் ஒரே இடத்தில், ஐந்து பெருமாள் கோவில்களின் சுவாமிகள், சூரியபிரபை வாகனங்களில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
சேலம் அம்மாபேட்டை சவுந்திரராஜ பெருமாள் கோவில், பட்டைக்கோவில் பிரசன்ன வரதராஜ பெருமாள் கோவில், கிருஷ்ணன் கோவில், பொன்னமாபேட்டை ஆஞ்சநேயர் கோவில் மற்றும் அசோக் நகர் லட்சுமி வெங்கடேச பெருமாள் கோவில்களில் இருந்து ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள்கள், சூரிய பிரபை வாகனத்தில் திருவீதி உலா வந்து, சிங்கமெத்தை சவுராஷ்டிரா கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி, மண்டகப்படி சிறப்பு பூஜைகள் நடந்தன. ரதசப்தமி விழாவையொட்டி, பெருமாள்கள் ஒரே இடத்தில் எழுந்தருளியதை காண, ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர். சவுராஷ்டிரா துளசி வனமாலா மகளிர் குழுவினர், பக்தி பாடல்களை பாடி பஜனை செய்தனர். சிறப்பு பூஜைகளுக்கு பின், நகரின் முக்கிய வீதிகள் வழியாக, அந்தந்த கோவில்களுக்கு உற்சவர் சுவாமிகள், திருவீதி புறப்பாடு செய்து கோவில்களை சென்றடைந்தது.