பதிவு செய்த நாள்
02
பிப்
2018
11:02
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே உத்தர கோச மங்கையில் உள்ள சுயம்பு வாராகி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் பிப்., 5ல் நடக்கிறது. உத்தரகோசமங்கையில் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார் சுயம்பு வாராகி அம்மன். இந்த கோயில், மங்களநாதர் சுவாமி கோயிலின் துணைக்கோயில்.
இங்கு அம்மன் உருவில் தேய்மானம் ஏற்பட்டது. சேதுபதி மன்னர் வேறு சிலை செய்தார். ’எனக்கு புதிதாக சிலையை மாற்ற வேண்டாம்’ என்று அசரீரியாக அம்பாள் கூற, மன்னர், பழைய சுயம்புமூர்த்திக்கு கும்பாபிஷேகம் நடத்தினார். சிவன் கோயில்களில் சப்தமாதர்களுடன் வாராகி எழுந்தருளி இருப்பார். ஆனால், தனி மூலஸ்தானமாக, தனி கோயிலாக இருப்பது உத்தரகோச மங்கையில் மட்டும்தான். இங்கு, மாதுளை அபிஷேகம் சிறப்பு வாய்ந்தது. அம்பாள் சன்னதியில் வாழை இலையில் அரிசியைப் பரப்பி உடைத்த தேங்காயில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டால், பகைவர் தொல்லை, புத்திரதோஷம் முதலியவை தீரும். அம்பாளை வழிபட்டால் உடல் வலிமை, பொலிவு பெறும். ஒவ்வொரு வளர்பிறை, தேய்பிறை பஞ்சமி நாட்களில் வாராகிக்கு விசேஷ அபிஷேகம், அன்னதானம் நடக்கிறது. இந்த கோயிலின் கும்பாபிஷேகம் வரும் 5ம் தேதி காலை 9:00-10:30 மணிவரை நடக்கிறது. மாலை 6:30 மணிக்கு வாராகி அம்மன், மங்கை மாகாளியம்மன் வீதியுலா நடக்கிறது.