பதிவு செய்த நாள்
05
பிப்
2018
02:02
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் என்பது நமது பொக்கிஷம். இக்கோயிலை இயற்கை சீற்றம், விபத்துகள், சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார சீர்கேட்டில் இருந்து காப்பது நம் கடமை. மீனாட்சி கோயிலை சுற்றி பாலிதீன் பைகளை பயன்படுத்த தடை இருந்தும், சில கடைகளில் பாலிதீன் பைகள் பயன்பாட்டில் இருக்கத் தான் செய்கிறது. சுற்றுலா பயணிகளும் பாலிதீன் பைகளை எடுத்து வருகின்றனர். இவர்களுக்கு மத்தியில் கோயில் வளாகத்தில் நாங்கள் பாலிதீன் பைகளை விற்கவோ, பயன்படுத்தவோ மாட்டோம் என்று, உறுதியுடன் இருக்கும் கீழசித்திரை வீதி கடைக்காரர்களில் சிலர் கூறியதாவது:
அசுத்தங்களால் நடந்த அசம்பாவிதம்: நான் மீனாட்சி கோயில் அருகே கடை வைத்து இரண்டு ஆண்டுகளாகிறது. இதுவரை பாலிதீன் பைகளை பயன்படுத்தியதே இல்லை. துணிப் பையில் மட்டுமே பொருட்களை வழங்குகிறேன். தினமும் கடையில் சேரும் குப்பைகளை கூட தரம் பிரித்து அதற்குரிய இடத்தில் சேர்த்து விடுவேன். கோயிலை சுற்றி துாய்மையாக இருந்தால் மட்டும் போதாது. கோயிலுக்குள் கடை வைத்திருப்பவர்களும், ஊழியர்களும் உடலையும், மனதையும் துாய்மையாக வைத்திருக்க வேண்டியதும் அவசியம். கண்ணுக்கு தெரியாத அசுத்தங்கள், எப்போது அகற்றப்படுகிறதோ அன்று தான் கோயிலில் இது போன்ற அசம்பாவித சம்பவங்கள் நடக்காது. கோயில் நிர்வாகமும், போலீசாரும் இனியாவது கவனமாக இருக்க வேண்டும்.ஜெ.டி.எஸ்.சரவணன், கடை எண் 47, மேக் மேக்கப்ஸ், பேன்சி டிரஸ்.
வரும் முன் காப்போம்: மீனாட்சி கோயில் வளாகத்தில் உள்ள கடைகளில் பாலிதீன் பை, தடை செய்யப்பட்ட நாள் முதல் இன்று வரை துணிப்பை தான் பயன்படுத்தி வருகிறேன். மாநகராட்சி அறிவுரைப்படி சிவப்பு, நீல நிற குப்பைத் தொட்டிகளில் குப்பைகளை சேர்த்து விடுவேன். கோயிலை சுற்றி வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்ட வீதிகள் எல்லாம் சுத்தமாக தான் இருக்கிறது. ஆனால், மழை காலங்களில் கோயிலை சுற்றி கழிவு நீர் தேங்கி தெருவில் பெருக்கெடுத்து ஓடுகிறது. கோயில் பகுதிகளில் இது போல பல வகைகளில் அசுத்தங்கள் ஏற்படத் தான் செய்கிறது. வரும் முன் காப்போம் என்ற, அடிப்படையில் கோயிலை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் செய்ய வேண்டும்.
ஏ.கதிரேசன், கடை எண்.38, கண்ணன் ஸ்டோர்,
அழகு சாதன பொருட்கள் பாலிதீன் பைகளை புறக்கணிக்கும் இவர்களை நாம் பாராட்டுவோம், பிற கடைக்காரர்களும் இவர்களை பின்பற்றலாமே. மீனாட்சி கோயிலின் பழம்பெருமை, புராதனம் காக்க விரும்பும் வாசகர்கள், பல்துறை வல்லுனர்கள் அதற்கான ஆலோசனைகளை மீனாட்சி கோயிலை காப்போம், தினமலர், டி.வி.ஆர்.ஹவுஸ், தினமலர் அவென்யூ, மதுரை - 625 016 என்ற முகவரிக்கு அனுப்பலாம். mdureporting@dinamalar.in