ஆற்றுகால் பகவதி அம்மன் பொங்கல் விழா: பிப்.22ல் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07பிப் 2018 10:02
திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் திருவனந்தபுரம் ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் பொங்கல் விழா பிப்.22ம் தேதி துவங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது.மதுரையை எரித்த கண்ணகி கொடுங்கல்லுார் செல்லும் வழியில் திருவனந்தபுரம் அருகே கிள்ளியாற்றின் கரையில் தங்கியதாகவும், இங்கு முதியவர் கனவில் வந்த தேவி ,தனக்கு இங்கு ஒரு கோயில் கட்டும்படி கூறியதாகவும் ஸ்தலவரலாறு கூறுகிறது.
இதன் அடிப்படையில் கிள்ளியாற்றின் கரையில் கட்டப்பட்ட தேவி கோயில் ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் என்று பிரசித்தி பெற்று விளங்குகிறது. இங்கு திருவிழா காலங்களில் முக்கிய நிகழ்வாக தோற்றம் பாட்டு என்ற கண்ணகி வரலாறு பாடப்படுகிறது.இங்கு நடைபெறும் முக்கிய திருவிழாவான பொங்கல் திருவிழாவில், ஒரே நேரத்தில் லட்ச கணக்கான பெண்கள் கோயிலை சுற்றி பல கி.மீ. துாரத்தில் பொங்கல் வைத்து வழிபடுகின்றனர். இந்த ஆண்டு பொங்கல் திருவிழா பிப். 22ம் தேதி மாலை 5:30 மணிக்கு அம்மனை காப்புக்கட்டி குடியிருத்தும் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. 24ம் தேதி காலை 8:45 மணிக்கு குழந்தைகளின் குத்தியோட்ட விரதம் தொடங்கும்.மார்ச் 2ம் தேதி காலை 10:15 மணிக்கு பொங்கல் அடுப்பில் தீ மூட்டும் நிகழ்ச்சி நடக்கிறது. கோயில் முன்புறம் உள்ள அடுப்பில் கோயில் மேல்சாந்தி தீ மூட்டியதும், மற்ற பொங்கல் அடுப்புகளில் தீ மூட்டப்படும். மதியம் 2:30 மணிக்கு பொங்கல் நிவேத்யம் நடைபெறும். மார்ச்3ம் தேதி இரவு 9:00 மணிக்கு அம்மனுக்கு கட்டிய காப்பு அவிழ்க்கப்பட்டு, இரவு 12:00 மணிக்கு குருதி தர்ப்பணம் நிகழ்வுடன் விழா நிறைவு பெறுகிறது.இந்த ஆண்டு பொங்கல் விழாவில் பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன்கள் தடை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் கேரளாவின் பல பகுதிகளில் இருந்து தென்னக ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்குகிறது.