பதிவு செய்த நாள்
07
பிப்
2018
12:02
கொடுமுடி: புது மாரியம்மன் கோவில் பொங்கல் விழாவில், பக்தர்கள், குண்டமிறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். கொடுமுடி நுழைவு பாலம் அருகே, புது மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு பொங்கல் விழா கடந்த ஜன.,30 ல் தொடங்கியது. இதையடுத்து தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. பொங்கல் விழாவை சிறப்பிக்கும் வகையில், நேற்று முன்தினம் பெண்களுக்கு, கோலப்போட்டி நடந்தது. முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல், நேற்று மாலை நடந்தது. இதில் கொடுமுடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சார்ந்த நூற்றுக்கணக்கான ஆண், பெண் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று பொங்கல் வைபவம், இரவில் மகா பூஜை நடக்கிறது. நாளை பால்குட தீர்த்தம், கம்பம் காவிரிக்கு செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. இதை தொடர்ந்து பிரமாண்ட வாணவேடிக்கை நிகழ்ச்சி நடக்கிறது. பிப்.,9ல் மஞ்சள் நீராட்டு விழாவுடன், பொங்கல் விழா நிறைவடைகிறது.