பதிவு செய்த நாள்
08
பிப்
2018
12:02
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், வரும், 13ல், மஹா சிவராத்திரி விழா நடத்துவதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.திருவண்ணாமலையில், வரும், 13ல், மஹா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. அன்று அதிகாலை, 3:00 மணிக்கு, அருணாசலேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.
லட்ச தீபம் : பின், அதிகாலை, 5:00 மணி முதல் பகல், 12:00 மணி வரை லட்சார்ச்சனை நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு, கோவிலின் அனைத்து பிரகாரங்களிலும், லட்ச தீபங்கள் ஏற்றி பக்தர்கள் வழிபடுவர். பிரம்ம தீர்த்தம், சிவகங்கை தீர்த்தம் ஆகியவற்றில் தீபங்கள் ஏற்ற, பாதுகாப்பு கருதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
மஹா சிவராத்திரி இரவில், நான்கு கால பூஜை நடக்கும். மஹா சிவராத்திரி உருவான கோவில் என்பதால், அருணாசலேஸ்வரர் கோவிலில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.அதன்படி, கோவில் கலையரங்கத்தில், மாலை, 6:00 மணி முதல் விடிய, விடிய தேவார பாடல்கள் இன்னிசை, பரத நாட்டியம் மற்றும் கோவில் ராஜகோபுரம் எதிரில், 108 தவில் நாதஸ்வர கலைஞர்களின் தொடர் இசை நிகழ்ச்சி ஆகியவற்றுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.பக்தர்கள் தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பாதுகாப்பு பணி : பொது தரிசனம், கட்டண தரிசனம் மட்டுமே அனுமதிக்கப்படும். சிறப்பு தரிசனம், அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில், 300க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.