தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித்திருவிழா இன்று(பிப்.20) காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
விழாவை முன்னிட்டு, அதிகாலை ஒரு மணிக்கு நடைதிறக்கப்பட்டு அதிகாலை 1:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடைபெற்றது. 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. கோயில் இரண்டாம் பிரகார கொடிமரத்தில் 5:30 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மாலை அப்பர் சுவாமிகள் உழவாரப்பணி நடக்கிறது. 12 நாட்கள் நடக்கும் விழாவில், காலை மற்றும் மாலையில் சுவாமி குமரவிடங்கபெருமான், தெய்வானை அம்மன் பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வருவர். விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக 5ம் நாள் 24ம் தேதி சிவன் கோயிலில் சுவாமி, அம்பாளுக்கு குடவருவாயில் தீபாராதனை, 26ம் தேதி அதிகாலை சண்முகபெருமான் உருகு சட்டசேவை, மாலை தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி வீதி உலா, 27ம் தேதி அதிகாலை சண்முகர் வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி உலா, பகலில் பச்சை சாத்தி சப்பரத்திலும் வீதி உலா வந்து கோயிலை சேருகின்றனர். மார்ச் முதல் தேதி அதிகாலை தேரோட்டம் நடக்கிறது. மார்ச் 2 இரவு தெப்ப உற்சவம் நடக்கிறது. மார்ச் 3 மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவு பெறுகிறது. கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று மாலை கொடிப்பட்டவீதி உலா நடந்தது.இந்நிகழ்ச்சியில் கோயில் தக்கார் கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.