பதிவு செய்த நாள்
20
பிப்
2018
12:02
இள்ளலுார்: இள்ளலுார் சின்னமுத்து மாரியம்மன் மற்றும் துலுக்கானத்தம்மன் கோவில்களின் கும்பாபிஷேகம், நேற்று விமரிசையாக நடைபெற்றது. திருப்போரூர் அடுத்த இள்ளலுார் கிராமத்தில், கடும்பாடி சின்னமுத்து மாரியம்மன் மற்றும் துலுக்கானத்தம்மன் கோவில்கள் தனித்தனியே உள்ளன. இக்கோவில்களில், சில மாதங்களாக நடைபெற்ற புனரமைப்பு பணிகள் நிறைவடைந்தன. சனிக்கிழமையன்று, விநாயகர் பூஜையுடன் துவங்கிய, இக்கோவில்களின் கும்பாபிஷேக விழா, நேற்று காலை, 6:30 மணிக்கு நான்காவது கால யாக பூஜைகளுடன் நிறைவு பெற்றது. கலச நீர் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, 9:30 மணிக்கு விமானத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது. தொடர்ந்து, மூலவர் கடும்பாடி சின்னமுத்து மாரியம்மன் மற்றும் துலுக்கானத்தம்மனுக்கு, கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து, சுவாமிகளுக்கு மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் செய்யப்பட்டன. விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.