பதிவு செய்த நாள்
10
மார்
2018
12:03
உடுமலை: உடுமலை அருகே, தரிசு நிலத்தில், நீர் வார்த்து செடி முளைத்த இடத்தில் கரும்பு பந்தலிட்டு, பாரம்பரிய முறையில், கோவில் திருவிழாவை கிராம மக்கள் கொண்டாடினர். உடுமலை அருகே வல்லக்குண்டாபுரம் கிராமத்தில், பழமை வாய்ந்த வீரமாத்தியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், பல்வேறு பாரம்பரிய முறைகளை பின்பற்றி, திருவிழா கொண்டாடப்பட்டு வந்தது.
பல்வேறு காரணங்களால், கடந்த, 20 ஆண்டுகளாக திருவிழா தடைபட்டிருந்தது. இந்தாண்டு, மாசி மாத வளர்பிறையில் திருவிழா கொண்டாட தேதி நிர்ணயிக்கப்பட்டது. திருவிழாவை அறிவிக்கும் முன், தரிசு நிலத்தை துாய்மைப்படுத்தி, குறிப்பிட்ட சமுதாய மக்கள், நீர் வார்ப்பது வழக்கம். அவ்வாறு, நீர் தெளிக்கப்படும் இடத்தில், குறிப்பிட்ட நாட்களில், வேம்பு, ஆவாரை, புங்கன் ஆகியவற்றுள் ஏதாவது ஒரு செடி முளைவிடும். இந்தாண்டு, வேம்பு நாற்று முளைவிட்டதும், திருவிழா அறிவிக்கப்பட்டது.பின்னர், கரும்பு வயலுக்கு, வீட்டுக்கு ஒரு நபராகச்சென்று, வேளாண்மை சிறக்க வழிபாடு நடத்தி, கரும்பு கட்டு எடுத்து வருகின்றனர்.
அந்த கரும்புகளை கொண்டு, செடி முளைவிட்ட இடத்தில், பந்தலிடுவர். பச்சரிசி மாவில் மஞ்சள் கலந்து, கோலமிட்டு, அவ்விடத்தில், பொங்கலிட்டு வழிபாடு நடத்துகின்றனர்.இருபது ஆண்டுகள் இடைவெளிக்குப்பிறகு, இந்தாண்டு வீரமாத்தியம்மன் திருவிழா வல்லக்குண்டாபுரத்தில் நடந்தது. கிராம மக்கள் கூறுகையில், வேளாண் தொழிலுக்கு உறுதுணையாக இருக்கும் இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த வழிபாடு நடக்கிறது. மது அருந்துபவர்களை, திருவிழா நிகழ்வுகள் எதிலும் பங்கேற்க அனுமதிப்பதில்லை. பல நுாற்றாண்டுகளாக இந்த பாரம்பரிய திருவிழா நடந்து வருகிறது, என்றனர்.