உயிர் உடல் என்னும் கூட்டில் இருக்கும் வரை, உயிரினம். உயிரற்ற உடல் பிணம் ( சவம் ) 50 – 60 ஆண்டு காலம் வாழ்ந்த கூடாகிய உடலை விட்டு உயிர் பிரியும் போது தான் இத்தனை ஆண்டுகள் இருந்த கூட்டில் மீண்டும் நுழைய முடியாமல் பரிதவிக்கும். தமக்கு என்றும் நிரந்தரம் என நினைத்த உறவுகள் அனைத்தும் உடலை எரித்துவிட்டு திரும்பிக் கூட பார்க்காமல் சென்றுவிட்டனர். இன்புற சேர்த்த சொத்து அனைத்தும் தமக்கு இல்லை என்று மெய்யை உயிர் உணர்ந்து பரிதவிக்கும் போது, மாபெரும் கருணையாளன் நம்பெருமான் ஈசன் கருணையுடன் உயிரை தன்னுள்ளே ஒடுக்கி அபயம் அளிக்கிறார். இதை உணர்த்தவே அப்பர் பெருமான் திருஅங்கமாலை தேவாரத்தில். .
உற்றார் ஆருளரோ – உயிர் கொண்டு போகும் பொழுது குற்றாலத் துறை கூத்தனல்லால் நமக்குற்றா ராருளரோ...!
என மிக தெளிவாக கூறியுள்ளார். யார் உதவியும் ஆறுதலும் கிட்டாது அல்லல்ப்பட்டு பரிதவிக்கும் நேரத்தில் கருணையுடன் அடைக்கலம் தந்து அபயம் அளிக்கிறார். அகிலத்தையே ஆட்டுவிக்கும் ஆண்டவன் நம் உயிரின் பரிதவிப்பை பொறுக்காமல் அந்த உயிருக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டி சுடுகாட்டிலும் எழுந்தருளி மாபெரும் கருணையோடு காக்கிறார்.