பதிவு செய்த நாள்
22
மார்
2018
01:03
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், பங்குனி உத்திர உற்சவம், வரும், 24ல் துவங்குகிறது. காயத்ரி மந்திரத்தின் தத்துவத்தை விளக்கும், 24 படிகள் உடைய, ஹஸ்தகிரி என அழைக்கப்படும், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், பங்குனி உத்திர உற்சவம், வரும், 24ல் துவங்கி, 29ல் நிறைவடைகிறது.
பெருந்தேவி தாயார் பிறந்த நட்சத்திரமான பங்குனி மாத உத்திரம் விழா, 30ல் கொண்டாடப்படுகிறது. தினமும் மாலை, 5:30 மணிக்கு, கண்ணாடி அறையில் இருந்து, பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, மலையாள நாச்சியாருடன் திருவடிகோவில் புறப்பாடு நடைபெறும். தொடர்ந்து, திருவடிகோவிலில் இருந்து மீண்டும், திருக்கோவில் நுாற்றுக்கால் மண்டபத்தை வந்தடைந்து, அங்கு ஊஞ்சல் உற்சவத்தை தொடர்ந்து, ஆராதனம், தீர்த்த சடாரி வினியோகம் நடைபெறும். பங்குனி உத்திர நாளான, 30ம் தேதியன்று, காலை, 9:00 மணிக்கு பெருமாள், தாயார், மலையாள நாச்சியார் திருமஞ்சனம் நடைபெறும். அன்று மாலை, 5:30 மணிக்கு, பெருமாள், உபயநாச்சியார், தாயார், புறப்பாடு ஆகி, திருக்கோவில், நான்கு கால் மண்டபத்தில், மாலை மாற்றுதல் நடைபெறுகிறது. தொடர்ந்து, கண்ணாடி அறையில் தரிசன தாம்பூலமாகி, தாயார் சன்னிதிக்கு வந்தடைவார். ஆண்டுதோறும், பங்குனி உத்திர தினத்தன்று மட்டுமே, தாயார் சன்னிதியில், பெருமாள் எழுந்தருளும் சிறப்பு நிகழ்வு நடைபெறும். வரும், 31ம் தேதி, மதியம், 1:00 மணிக்கு, தாயார் சன்னதியில் திருமஞ்சனமும், மாலை, 5:00 மணிக்கு, கந்தபொடி வசந்த உற்சவ புறப்பாடு நடைபெறும். பக்தர்களின் வசதிக்காக, கோவில் வளாகத்தில் நிழல் தரும் வகையில், பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.