பதிவு செய்த நாள்
28
மார்
2018
11:03
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, தேர் திருவிழா விமரிசையாக நேற்று நடைபெற்றது. வெளியூர்களில் இருந்து வந்திருந்த சிவனடியார்கள் மற்றும் பக்தர்கள், தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
பஞ்ச பூத தலங்களில் முதன்மையாக கருதப்படும் ஏகாம்பரநாதர் கோவிலின், பங்குனி உத்திர திருவிழாவின், பிரபல உற்சவமான, தேர் திருவிழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதை முன்னிட்டு, நேற்று காலை, 6:00 மணிக்கு ஏகாம்பரநாதர், ஏலவார் குழலி அம்பாள் திருத்தேரில் எழுந்தருளினர். அதிகாலையில் இருந்து பக்தர்கள் தேரடியில் காத்திருந்தனர். காலை, 7:30 மணிக்கு, தீபாராதனை முடிந்து, தேர் நிலையில் இருந்து புறப்பட்டது. பல மாவட்டங்களில் இருந்து, சிவனடியார்கள் வந்திருந்தனர். சிவ பூத கண வாத்தியங்கள், பம்பை, கேரள செண்டை மேளம், கோலாட்டம், மாணவியரின் பரத நாட்டியம், திருவாசகம் பாடல் போன்றவற்றை பக்தர்கள் இசைத்து சென்றனர். நான்கு ராஜ வீதிகளிலும் பக்தர்கள் அன்னதானம் வழங்கினர். எனினும், ஆங்காங்கே சுத்தமான தண்ணீர் தானமாக வழங்கியிருந்தால், சிறப்பாக இருந்திருக்கும். நான்கு ராஜ வீதிகளையும் சுற்றி, பகல், 12:45 மணிக்கு, தேர் நிலையை அடைந்தது.